தனியார்மயம் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 10) 2000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 10 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கும் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
நகரை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது?. பிறகு அரசுக்கு என்ன வேலை? மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?. எல்லாமே தனியார் மயம் என்றால் அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது? ஒரே காரணமாக தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறுகிறீர்கள்.
மதுரையில் 200 கோடிக்கு நூலகம் அவசியமா? சென்னைக்கு வெளியே 540 கோடி கலையரங்கம் கட்டச் சொன்னது யார்? இப்படி தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என சொல்லுங்கள். வீடு தேடி அரசு என்கிறீர்கள். ஆனால் ஏன் போராடும் இவர்களின் வீட்டை தேடி செல்லவில்லை? உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இருக்கிறது ஆனால் போராடும் மக்களுடன் ஏன் ஸ்டாலின் நிற்கவில்லை. தனியாரிடம் ஒப்படைத்தால், இங்கிருக்கு மக்களை நீக்கிவிட்டு, வட இந்தியாவில் இருந்து ஆட்களை இறக்குவார்கள்? அதானே நடக்கும்? அறநிலையத்துறை அமைச்சருக்கு இந்த விசயத்தில் என்ன சம்பந்தம்?
தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்” என சீமான் பேசினார்.