புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக நீடித்து வரும் உட்கட்சி மோதலின் அடுத்த கட்டமாக, அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்டு நேருக்கு நேராக திமுக நிர்வாகிகள் மல்லுக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை திமுகவில் உட்கட்சி மோதல் அதிஉச்சத்தை எட்டி நிற்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு புதுக்கோட்டை மாநகர செயலாளராக இருந்த செந்தில் (வயது 55) மரணம் அடைந்ததில் இருந்து இந்த பஞ்சாயத்து தொடங்கியது.
புதுக்கோட்டை மாநகரச் செயலாளராக செந்தில், அவரது மனைவி திலகவதி நகர்மன்றத் தலைவராக இருந்தனர். புதுக்கோட்டை நகராட்சி- மாநகராட்சியான நிலையில் அதன் முதல் மேயரானார் திலகவதி.
இந்த நிலையில் மாநகரச் செயலாளர் செந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மகன் கணேஷுக்கு பிப்ரவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் செந்தில் மரணம் அடைந்தது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர் செந்தில். அதனால் செந்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை அமைச்சர் நேரு உடனிருந்தார்.

செந்தில் மரணத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம், புதுக்கோட்டையில் மத்திய அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், மாநகரப் பொறுப்பாளராக தொண்டரணி ராஜேஷ் அறிவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக ராஜேஷ் அறிவிக்கப்பட்ட அந்த இரவே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். திமுக மா.செ. செல்லப்பாண்டியன், எம்.எல்.ஏ. முத்துராஜா ஆகியோரை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மேலும் ஆத்திரத்தின் உச்சியில் புதுக்கோட்டை மாநகர திமுக அலுவலகத்துக்கு பூட்டும் போட்டுவிட்டனர்.
இந்த விவகாரம் புதுக்கோட்டை திமுகவில் நெருப்பாக தகித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் புதுக்கோட்டையில் இருந்து அத்தனை வட்டச் செயலாளர்களும் பெரும் படையுடன் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு படையெடுத்து போய், ராஜேஷை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். முதல்வர் ஸ்டாலினுக்கு நன்கு அறிமுகமான சீனியர் நிர்வாகிகள் கூட இந்த அதிருப்தி கூட்டத்தில் இருந்தனர். அறிவாலயத்துக்கு அப்போது வந்த முதல்வர் ஸ்டாலின், அந்த சீனியர்களை அழைத்து, என்ன விஷயம் என கேட்ட போது, அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரின் கோபத்தை சொல்லி இருக்கின்றனர். அப்போது 2 மாதங்களில் ராஜேஷ் மாற்றப்பட்டு வேறு ஒருவர் அறிவிக்கப்படுவார் என அறிவாலயத்தில் வாக்குறுதி தரப்பட்டதாம்.
ஆனாலும் ராஜேஷ் மாற்றப்படவில்லை.
கடந்த மே மாதம், மண்டல பொறுப்பாளரான அமைச்சர் நேரு, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். அப்போதும் மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷின் பதாகைகளை எதிர்ப்பாளர்கள் கிழித்து எறிந்தனர். மேலும் ராஜேஷை மாற்றுகிறோம் என தலைமை கழகம் உறுதியளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியும் போர்க்கொடி தூக்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை திமுக தலைமைக்கு பலமுறை அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக்காட்டியும் வந்தார். ஆனாலும் ராஜேஷ் மாற்றப்படுவதாக இல்லை என்ற நிலைமைதான் தொடருகிறது.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று ஜூலை 8-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் நேரு, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மா.செ. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

அப்போதும் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தியபடி, மாநகரப் பொறுப்பாளரை (ராஜேஷை) மாற்று! என முழக்கமிட்டனர் திமுக நிர்வாகிகள். அத்துடன் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்குள் அமைச்சர் கே.என்.நேருவை உள்ளே செல்ல வழிவிடாமல் தடுத்து நிறுத்தி அவருடன் நேருக்கு நேராக வாதிட்டனர். அவர்களை ஒருவழியாக ஒதுக்கிவிட்டு மண்டபத்துக்குள் சென்றார் அமைச்சர் நேரு.
புதுக்கோட்டையில் அமைச்சர் கே.என்.நேருவை மீண்டும் மீண்டும் முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்துவதே மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷை மாற்றியாக வேண்டும் என்பதற்குதான்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவினர், மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷை மாற்றத்தான் வேண்டும். ஆனால் கட்சித் தலைமை, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற நிலையில் இருக்கிறது; இந்த நிலை தொடர்ந்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியும் திமுகவை விட்டு ‘கடந்து போகும் அபாயம்’ இருக்கிறது என இப்பவே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’ என எச்சரிக்கை செய்கின்றனர்.