உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா அதிபர் புதின் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
அமெரிக்கா அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தவர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா அதிபராக பதவியேற்ற காலம் முதல் அமைதியின் நாயகனாக வெளிப்படுத்தி வரும் டிரம்ப், ரஷ்யா- உக்ரைன் யுத்த நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது, ரஷ்யா அதிபர் புதின் அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு வருகை தந்து டொனால்ட் டிரம்ப்புடன் உக்ரைன் யுத்த நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டிரம்ப்- புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது புதின் கூறுகையில், அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்திருந்தால் உக்ரைன் மீதான யுத்தம் தொடங்கியிருக்க வாய்ப்பு இல்லை. டிரம்ப்புடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்கா- ரஷ்யா இடையே சீரான பொருளாதார உறவு உள்ளது என்றார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ரஷ்யா அதிபர் புதினுடன் இன்று நடந்த சந்திப்பு பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் அழைத்து விவரிப்பேன். இன்று ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்போதைய சந்திப்பைத் தொடர்ந்து ரஷ்யா- உக்ரைன் அதிபர்களுடன் இணைந்து பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
டிரம்ப்- புதின் இடையே அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 2-வது கட்ட பேச்சுவார்த்தைகள் ரஷ்யாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.