ஸ்மார்ட்போனும் கையுமாகத் திரியும் சிறுவர்களைப் பார்த்து, “இப்படியே போனா இவங்க எதிர்காலம் என்னாகும்?” என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்தும் (UK) சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் முடிவை மிகத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
ஆஸ்திரேலியா காட்டிய வழி: கடந்த ஆண்டு (டிசம்பர் 2025) ஆஸ்திரேலியா உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. இந்தத் தடையை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு சுமார் 50 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த “ஆஸ்திரேலிய மாடல்” (Australia-style ban) உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இங்கிலாந்தின் திட்டம் என்ன? இங்கிலாந்து சுகாதாரத்துறைச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இது பற்றிக் கூறுகையில், “சிறுவர்களின் மனநலம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் கவலையளிக்கிறது. எனவே, இந்தத் தடையைக் கொண்டுவருவது குறித்துப் பிரதமர் ஆலோசித்து வருகிறார்,” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ (X) தளத்தில் உள்ள ‘Grok’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவி (AI tool), பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாசமான படங்களை உருவாக்கியது சமீபத்தில் பெரும் சர்ச்சையானது. இதுவும் அரசின் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஆதரவும்… எதிர்ப்பும்… இந்தத் தடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
- ஆதரவு: “இணையம் ஒரு ‘காட்டு தர்பார்’ (Wild West) போல ஆகிவிட்டது. பெரியவர்களுக்குச் சுதந்திரம் வேண்டும், ஆனால் குழந்தைகளுக்குப் பாதுகாப்புதான் முக்கியம்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் கெமி பதேனோக் (Kemi Badenoch) கருத்து தெரிவித்துள்ளார்.
- எதிர்ப்பு: மறுபுறம், “தடை விதித்தால் மட்டும் போதாது. சிறுவர்கள் வி.பி.என் (VPN) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தடையை மீற வாய்ப்புள்ளது. இது அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்,” என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தத் தடை அமலுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இங்கிலாந்தின் இறுதி முடிவு இருக்கும். ஆனால், “சிறுவர் நலனே முக்கியம்” என்ற குரல் ஓங்கி ஒலிப்பதால், விரைவில் இங்கிலாந்திலும் “நோ சோஷியல் மீடியா” போர்டு மாட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
