கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் காமாட்சி தேவி (வயது 27) உயிரிழந்துள்ளார். Udumalapettai Young Woman Killed
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியது பெங்களூர் ஆர்சிபி அணி. 18 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி முதல் முறையாக வென்றதால் பெங்களூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
பெங்களூருவில் கர்நாடகா மாநில அரசும் கிரிக்கெட் சங்கமும் தனித்தனியே ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தின. பெங்களூரு விதான் சவுதா முன்பாக மாநில அரசு நடத்திய பாராட்டு விழாவில், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டினர். மேலும் விதான் சவுதாவில் இருந்து பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் வரை வெற்றிப் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பெங்களூரு மாநகரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த வெற்றிப் பேரணி ரத்து செய்யப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இந்த மைதானத்துக்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்; 33 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு ஆர்சிபி வெற்றி பேரணியில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதனிடையே பெங்களூரு கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காமாட்சிதேவி (வயது 27) என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி தேவி, பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளரின் மகள் காமாட்சி தேவி. அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் இன்று மே 5-ந் தேதி ஒப்படைக்கப்படும்.