ADVERTISEMENT

’10 தோல்வி பழனிசாமியும்.. மொத்த தோல்வி மோடியும்’ என்னதான் கூட்டணி வச்சாலும்’ – உதயநிதி விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு இன்று (பிப்ரவரி 7) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “இந்தியாவிலேயே ஒரு கட்சியுடைய இளைஞர் அணிக்கு ஐந்து லட்சம் நிர்வாகிகளும், ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமை நம்முடைய இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு. இங்கு திருச்சி சிவா பேசுகையில் இளைஞரணியை ராணுவத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். ஒரு ராணுவத்திற்கு ரெண்டு விஷயம் மிக மிக முக்கியம். அதாவது அடிப்படை நிர்வாக ரீதியான கட்டமைப்பு பலம். இரண்டாவது தங்களுடைய தலைவர் என்ன சொல்கிறாரோ அதைச் கட்டளையோடு கட்டுப்பாட்டோடு களத்தில் இறங்கிச் செஞ்சு காட்டுவது. கழகத்துடைய இளைஞர் அணிக்கும் இது ரெண்டுதான் மிக மிக முக்கியமான பலம்.

ADVERTISEMENT

மாநில, மாவட்ட ஒன்றியம் முதல் பூத் வரைக்கும் இன்னைக்கு நிர்வாகிகள் கொண்ட ஒரு வலுவான அமைப்பு பல நம்முடைய இளைஞர் அணிக்கு உண்டு. அதே மாதிரி கழக தலைவர் சொல்லும் எந்த விஷயத்தையும் உடனடியாக களத்தில் இறங்கிச் செய்து முடிக்கிற சாமர்த்தியமும் நம்முடைய இளைஞர் அணிக்கு உண்டு. உதாரணத்துக்கு, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நீர்நிலைகளைத் தூர்வாருவது, பொய் பெட்டி நிகழ்ச்சி மூலம் கழகத்துக்கு எதிரான அவதூறுகளுக்குப் பதில் சொல்வது, சிறுபான்மையின நலன் காக்க சி.ஏ.ஏ. என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்தது. கொரோனா காலத்தில் மக்களுக்காக ஹெல்ப் லைன் துவங்கியது, மாணவர்களுடைய கல்வி உரிமை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம், தொகுதி தோறும் கலைஞர் நூலகங்கள், தொகுதி தோறும் பயிற்சி பாசறை கூட்டங்கள், 200க்கும் அதிகமான இளம் பேச்சாளர்கள் தேர்வு, வாசிப்பை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம், கழக வரலாற்றை எடுத்துச் சொல்ல முரசொலியில் பாசறை பக்கம், கொள்கை உணர்வு ஊட்ட அறிவுத் திருவிழா என கழகப் பணி, மக்கள் பணி என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்து இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பது நம்முடைய இளைஞர் அணி.

வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம்

ஆனால் எந்த அமைப்பு பலமும் இல்லாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், கொள்கை என்றால் என்ன? லட்சியம் என்றால் என்ன என்று எதுவுமே தெரியாம வெற்றுக்கூச்சல் போடுகின்ற ஒரு கூட்டம் இன்று தமிழ்நாட்டில் சுத்திக்கொண்டு இருக்கிறது. அவங்களால தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அவங்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் கிடையாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.

ADVERTISEMENT

இன்று திமுகவுக்கு வயசு 76. ஆனால், இன்னமும் அதே இளமையோடும், வீரத்தோடும் போர்க்களத்தில் நிற்பது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அப்படிப்பட்ட நம்முடைய கழகத்தின் சோல்ஜர்ஸ் ட்ரைன் பண்ணி அனுப்பும் அணிதான் நம்முடைய இளைஞர் அணி. நீங்கள் உணர வேண்டும். நம்முடைய கழக தலைவர் இளைஞர் திமுகவை துவங்கினார். பதினைந்து வயதில் துவங்கினார். அந்த இளைஞர் அணிக்கு விதை போட்டார். அன்னைக்கு இந்த அணிக்குப் பெயர் கோபாலபுரம் இளைஞர் திமுக. கோபாலபுரத்தில் ஆரம்பித்த இளைஞர் அணியின் திமுக இன்னைக்கு தமிழ்நாட்டுடைய கோட்டையில் நம்முடைய தலைவரை உக்கார வைத்திருக்கிறது. கலைஞர் என்னுடைய மூத்த பிள்ளை முரசொலி என்று அடிக்கடி சொல்வார். அதே மாதிரி நம்ம தலைவருக்கு மூத்த பிள்ளை எதுன்னு கேட்டால் நம்முடைய இளைஞர் அணி தான்.

இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை இங்கே நான் உங்களோட பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நம்முடைய கழக தலைவர் 1976ல் இதே பிப்ரவரி மாசம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது சரியாக 50 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அன்று ஒரு இளைஞராக சிறைக்குப் போன நம்முடைய கழக தலைவர் வெளிய வரும்போது ஒரு பண்படுத்தப்பட்ட ஆற்றல்மிகு ஒரு தலைவராக வெளியில் வந்தார். அன்னைக்கும் இதே துணிச்சலோடு, இன்னைக்கும் அதே துணிச்சலோடு வீரத்தோடு பாசிஸ்ட் சக்திகளை எதிர்த்து நிற்கிறார். அது மட்டுமல்ல, அப்போதும் இப்போதும் எப்போதும் மக்களோடு மக்கள் மக்களாக களத்தில் நிக்கின்ற ஒரு இயக்கமாக, களத்தில் நிக்கின்ற ஒரு தலைவராக நம்முடைய தலைவர் இருக்கின்றார். அதனாலதான் இன்னைக்கு திமுகவுக்கும், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT
எட்டிப்பார்க்காத மோடி

அதனால் சங்கிங்களுக்கும் நம் மேல் எப்போது பார்த்தாலும் ஒரு எரிச்சல், ஒரு கோபம். இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டு பக்கம் எட்டிப்பார்க்காத நரேந்திர மோடி.. இப்போது தமிழ்நாட்டை நோக்கி வர ஆரம்பித்து இருக்கிறார். என்ன காரணம்..தேர்தல். தேர்தல் வந்தவுடனே அவருக்குத் தமிழ்நாடு ஞாபகம் வந்துரும். இனிமே மோடியை புடிக்க முடியாது. அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். திருக்குறள் சொல்லுவார். கடலுக்கு அடியில போய் தியானம் எல்லாம் செய்வார். கொஞ்ச நாள் முன் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். தமிழ்நாட்டுக்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேணும் என்று சொன்னார்.

பிரதமர் மோடி அவர்களே! நாங்கள் திராவிட மாடல் என்கிற சிங்கிள் எஞ்சினை வைத்து ஏற்கனவே 11.19 சதவிகித வளர்ச்சியை எட்டி விட்டோம். நீங்கள் சொல்லும் அந்த டபுள் டப்பா என்ஜின் வைத்துக்கொண்டு, பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் இன்னும் 6 சதவீத வளர்ச்சியைக் கூட நீங்க தொட வில்லை. தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சியில பாதியை கூட நீங்கள் தொடவில்லை.

பொதுவாக தேர்தலை ஜனநாயக திருவிழா என்று சொல்வார்கள். ஒரு திருவிழாவில் வாணவேடிக்கை நடக்கும். மக்கள் எல்லாம் உற்சாகமாக இருப்பார்கள். எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அணியாகத்தான் நம்முடைய தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகிழ்ச்சியான அணியாக இன்றைக்கு இருக்கிறது. அதே மாதிரி திருவிழா நேரத்தில் புதுப்புது கடைகள் எல்லாம் போடுவார்கள். மக்களைக் கூட்டி பொய் விளம்பரம் சொல்லிப் பொய் வியாபாரம் வியாபாரம் எல்லாம் பண்ணுவாங்க. பலூன் எல்லாம் ஊதி குழந்தைகளுக்கு எல்லாம் ஷோ காட்டுவாங்க. அது மாதிரி தான் இன்னைக்கு தேர்தல் வந்தவுடனே தேர்தல் திருவிழா என்பதால் தமிழ்நாட்டில் புதிது புதிதாக கடை விரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். எப்படி திருவிழா நேரத்தில் போட்ட கடை எல்லாம் திருவிழா முடிந்த உடனே காணாம போகுமோ அதே மாதிரி இந்தத் தேர்தல் முடிஞ்சதும் அந்தக் கடை அனைத்தும் காலி ஆயிடும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்னைக்குமே மக்களோட மக்களா நின்னுருக்கும்.

தமிழ்நாடு சிக்காது

திருவிழா கூட்டத்தில் பிள்ளை புடிக்கிற கோஷ்டி, பிக் பாக்கெட் அடிக்கிற கோஷ்டியும் உள்ளே வருவார்கள். மிட்டாய்,ஐஸ்கிரீம்,சாக்லேட் வாங்கி தரேன்னு குழந்தைங்கள கடத்த பார்பார்கள். இப்போது அதே மாதிரி ஆரம்பித்து இருக்கிறார்கள். ED கேஸிலிருந்து நான் காப்பாத்துறேன். பெரா கேஸிலிருந்து நான் உங்களை காப்பாத்துறேன். மெடிக்கல் காலேஜ் கேஸ் ஊழலிலிருந்து நான் உங்களை காப்பாத்துறேன். சம்பந்தி டெண்டர் எடுத்த கேஸை நான் முடிச்சு தாரேன். இப்படி கேஸை எல்லாம் காட்டி காட்டி இன்னைக்கு அடிமை கூட்டத்தை பாசிஸ்டுகள் தூக்கியிருக்கிறார்கள். இப்படி இந்த மிரட்டலுக்கெல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம். ஆனால்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான். ஏன் என்றால், எங்களை வழிநடத்துறது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஒரு தலைவர். பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, தமிழ்நாடு என்னைக்குமே உங்க கையில் சிக்காது.

முரட்டு அடிமை

எங்க தலைவர் அடிக்கடி சொல்லுவது மாதிரி தமிழ்நாடு என்னைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். வழக்கம் போல தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டத்தையும் தர வில்லை. இதில் என்ன கொடுமை என்றால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை படிச்சு முடிக்க கூட இல்ல. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். மிகச் சிறந்த பட்ஜெட். சிறப்பான பட்ஜெட் என்கிறார். பட்ஜெட்டையே படிச்சு முடிக்கல. நீங்கக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முரட்டு பக்தர்கள் முரட்டு தொண்டர்கள்னு. ஆனால் முரட்டு அடிமை கேள்விப்பட்டிருக்கங்களா? எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை.

அது மட்டும் இல்ல. மோடி தமிழ்நாட்டுக்கு வந்தவுடனே சூரியன் மறைஞ்சிடுச்சு அப்படின்னு சந்தோஷப்படுகிறார். கால்களை மட்டுமே பாத்து கொண்டு இருந்தீங்கன்னா.. மேல பாத்தா தான உங்களுக்குச் சூரியன் தெரியும் என்று நம் தலைவர் சொன்னார். உடனே எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன தெரியுமா சொல்கிறார். கால பார்த்து நடந்தா தான் நாங்க நேரா பாத்து நடக்க முடியும். அப்படின்னு ரொம்ப அறிவுபூர்வமா கேட்டாரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே! தலையை நிமிர்ந்து பாதையைப் பாத்து நடந்தால் தான் வழியைப் பாத்து நடந்தா தான் நேரா நடக்க முடியும். நீங்கள் மோடியுடைய கால், அமித்ஷாவின் கால்களை பார்த்து கொண்டே நடந்தீங்கன்னா உங்கள மாதிரி முட்டு சந்தில்தான் போய்க் நிக்க முடியும். இவ்வளவு நாளா அதிமுக பாஜகவுடைய கிளையா இருந்தது. இன்னைக்கு அதிமுக, பாஜகவோட இலையா மாறிடுச்சு. தமிழ்நாட்டுல 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் கூட்டணி வச்சாலும் தமிழ்நாட்டுக்குள்ள உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டாங்க.

கண் அசைத்தால் போதும்

இந்துத் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தபோது உங்களோட தடி அடியால், துப்பாக்கியால் சாதிக்க முடியாத இளைஞர் கூட்டத்தை நான் என்னோட சுட்டு விரல் காட்டினால் தமிழ்நாட்டு இளைஞர் படை சாதிக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். நான் சொல்றேன் சுட்டு விரல் தேவை இல்ல உங்களுக்கு. நீங்கக் கண் அசைத்தால் போதும். இங்கு இருக்கக்கூடிய இளைஞர் பாடம் நீங்கச் சொல்றதை செஞ்சு காட்டும். பாசிஸ்டுகளிடமிருந்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் எந்த நேரமும் காப்பாற்றும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share