ஒன்றிய பாசிச பாஜகவை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும் என ஆளுநருக்கு, தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “கிண்டியில் தமிழக ஆளுநர் ரவி இருக்கிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். பாசிச பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக நினைத்து கொண்டு நமக்கு செய்து கொண்டிருக்கிறார். 3 நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் சென்று பேசுகையில் பல இடங்களில் உள்ள சுவர்களில் தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்று எழுதி வைத்துள்ளீர்களே.. யாரை எதிர்த்து போராட போகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
உங்களை வென்று காட்டுவோம்
நான் ஏற்கனவே அவருக்கு ஒரு பதிலை சொல்லி இருக்கிறேன். திரு ஆளுநர் ரவி அவர்களே உங்களோடுதான் தமிழ்நாடு போராடும்.. உங்களை வென்று காட்டுவோம். பெரியார் தொண்டர்கள் நிறைந்திருக்கும் இந்த அரங்கத்தில் நான் இன்னும் அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகிறேன். மாநிலத்தின் உரிமைக்காக தமிழ்நாடு போராடும்; சமூக நீதியை காக்க தமிழ்நாடு இன்னும் போராடும்; மத வெறியை, சாதி வெறியை எதிர்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும்; இந்தி திணைப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடும்; ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச பாஜகவை எதிர்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும்.
இன்றைக்கு ஆளுநர் ரவி பேசும்போது அவர் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக சொல்லியுள்ளார். நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறீர்களே.. அதற்கு தமிழ்நாடு போராடியது தான் முக்கியமான காரணம் . அன்றைக்கு தமிழ்நாடு போராடாமல் இருந்திருந்தால் ஆளுநர் ரவி இன்றைக்கு தமிழில் பேசி இருக்க மாட்டார். நாமெல்லாம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்திருப்போம்.
இந்தி திணிப்புக்கு எதிரான முதல் போராட்டம்
இந்தி திணிப்பிற்கு எதிரான உணர்ச்சியை இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கியவர் தான் தந்தை பெரியார். 1937 தந்தை பெரியார் இந்தி திணிப்புக்கு எதிரான முதல் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது தொடங்கி இப்போது வரை எப்படியாவது தமிழகத்தில் இந்தியை திணிக்க இன்று வரை ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தில் திணிக்க பார்த்தது. மற்ற மாநிலங்கள் அதை ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழக முதல்வர் மட்டும் அதற்கு குறுக்கே நின்றார். ஏனென்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நீங்கள் எப்படியாவது தமிழகத்தில் இந்தி திணிப்பை ஆரம்பித்து விடுவீர்கள். இந்தி மட்டுமல்ல சமஸ்கிருதத்தையும் கொண்டு வந்து விடுவீர்கள் என்பதால் தான் அதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.