தமிழ்நாட்டுக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை இல்லை; வளர்ச்சிக்கான திராவிட மாடல் இன்ஜின் போதும் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
கோவை கருமத்தம்பட்டியில் இன்று பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைக்கு மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கோவையிலே நாம எல்லாம் சந்திச்சு பேசி இருக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். ஏற்கனவே திருவண்ணாமலையில் டிசம்பர் மாதம் வடக்கு மண்டல நிர்வாகிகளைச் சந்திச்சோம். அதன்பிறகு விருதுநகர்ல தெற்கு மண்டல நிர்வாகிகளை எல்லாம் சந்திச்சோம். அந்த நிகழ்ச்சிக்கெல்லாம் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் வந்து நிர்வாகிகளைச் சந்திச்சு வாழ்த்து சொன்னாங்க.
இன்னைக்கு பல்வேறு பணிச்சூழல் காரணமாகக் தலைவரால் வர முடியல. அதனால உங்களை எல்லாம் சந்திக்கறதுக்காக நான் வந்திருக்கின்றேன். நிச்சயம் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பேன். நம்முடைய தலைவர் அவர்கள் மீண்டும் முதல்வராக வென்று இந்த மேற்கு மண்டலத்துடைய நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் வெற்றி விழாவில் நிச்சயம் உங்களை எல்லாம் சந்திப்பார். இன்னைக்கு தலைவர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரலைன்னாலும் அவருடைய நினைப்பு முழுக்க எண்ணம் முழுக்க இந்த இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு எப்படி நடந்துட்டு இருக்குறோம் அப்படிங்கிறதை யோசிச்சுட்டு இருப்பார்.

இந்த மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை இவ்வளவு சிறப்பாகக் கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடத்திக்கொண்டு இருக்கக்கூடிய மண்டல பொறுப்பாளர் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கும். மாநாட்டுடைய வெற்றிக்காகக் கடந்த பத்து பதினைந்து நாட்களாகக் கடுமையாக உழைத்த அனைத்து மாவட்டக் கழக செயலாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், அனைத்து அமைப்பாளர்களுக்கும், இந்தப் பகுதி மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களுக்கும், சகோதரர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி அவர்களுக்கும், அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இளைஞர் அணினுடைய மாநில இணைத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அத்தனை நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவிச்சுக்கிறேன்.
வெஸ்ட்ல திமுகதான் பெஸ்ட்
இன்னைக்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 16 கழக மாவட்டங்கள் முப்பத்தொன்பது தொகுதிகளிலிருந்து சுமார் எண்பது ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்க வந்திருக்கிறீங்க. உங்களுடைய எழுச்சியைப் பார்க்கும் பொழுது ஒன்னு மட்டும் கன்ஃபர்ம் வெஸ்ட்ல திமுகதான் பெஸ்ட்ன்னு இந்தக் கூட்டம் நிச்சயம் நிரூபிச்சு காட்டும். அதற்கு உங்களோட எழுச்சியே உதாரணம் சாட்சி.

இளைஞர் அணியின் சிறப்புகள்
இன்னைக்கு இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு பணியை இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு போலத் தொடர்ந்து நாம நடத்திக்கிட்டு இருக்கிறோம். இன்னைக்கு பல கட்சிகள் தமிழ்நாட்டுல எத்தனை பூத் இருக்குன்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்காங்க. இப்ப தான் கணக்கு எடுத்துட்டு இருக்காங்க. ஆனா நாம பூத்துக்குத் தான் இத்தனை நிர்வாகிகளை நியமனம் செஞ்சு டேட்டாவோட களப்பணியில் கட்சிப் பணியில் இளைஞர் அணி பணியில் நாம செஞ்சிட்டு இருக்கோம்.
இன்னைக்கு இளைஞர் அணில மட்டும் ஐந்து லட்சம் நிர்வாகிகளை நாம பெற்றுருக்கோம். ஐம்பது லட்சம் உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டுல இல்ல இந்தியாவிலேயே எந்த இயக்கத்துடைய ஒரு அணிக்கும் இப்படிப்பட்ட சிறப்பு கிடையவே கிடையாது. நம்முடைய இளைஞர் அணியை கழகத்துடைய ராணுவம்னு தலைவர் சொல்ற மாதிரி ஒரு கட்டுப்பாடோடு நடத்திட்டு இருக்கிறோம். உதாரணத்திற்கு, கடந்த 6 வருடங்களாக மட்டும் அத்தனை களப் பணிகளை, கழகப் பணிகளை, மக்கள் பணிகளை செஞ்சிருக்கோம். கடந்த 6 ஆண்டுகள் மட்டும் எடுத்துக்கிட்டோம்னா நீர்நிலைகளைத் தூர்வாரறது, சிறுபான்மையினர் நலன் காக்க சி.ஏ. என்.ஆர்.சி சட்டத்தை எதிர்த்தது. கொரோனா காலத்தில் மக்களைக் காக்கறதுக்கு ஹெல்ப் லைன் துவங்கினது. மாணவர்களுடைய கல்வி உரிமை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம் தொகுதிதோறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொகுதிதோறும் பயிற்சி பாசறை கூட்டங்கள் இருநூறுக்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது. வாசிப்பை மேம்படுத்த பதிப்பகம், கழக வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்த முரசொலி பாசறை பக்கம், கொள்கை உணர்வை கொண்டாட அறிவுத் திருவிழா இப்படி எத்தனையோ பணிகளை நம்முடைய இளைஞர் அணி வெற்றிகரமாகச் செஞ்சு முடிச்சிருக்குன்னா, இங்க வந்திருக்கக்கூடிய இளைஞர் அணி நிர்வாகிகள் அந்த வெற்றியுடைய உழைப்புக்கு முழு காரணம்.
மெயின் மேட்ச் விளையாடுறதுக்கு முன்னாடி எல்லாம் நெட்டுல பிராக்டீஸ் பண்ணுவாங்க. கழகத்துல பண்ணியாற்றுவதற்கு இன்னைக்கு இளைஞர் அணி ஒரு பிராக்டிசிங் கிரவுண்டாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இத ஏன் நான் இன்னைக்கு சொல்றேன்னா,
இந்தி சமஸ்கிருதம் திணிப்பு- உரிமைகள் பறிப்பு
மக்களுக்கு எப்போதுமே கொடுக்கின்ற ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. பறிக்கிற ஆட்சி ஒன்றிய பாஜக ஆட்சி. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தறனாலதான் இன்னைக்கு நம்முடைய முதலமைச்சர், நம்முடைய தமிழகம் 11.19% வளர்ச்சியோடு இன்னைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகி இருக்கு. அதற்கு என்னெல்லாம் இடைஞ்சல் செய்யலாம் அப்படின்னு இன்னைக்கு திட்டம் போட்டு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுட்டு இருக்கு.
மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைன்னு ஒவ்வொரு உரிமையையும் பறிக்க பாக்குறாங்க.நியூ எஜுகேஷன் பாலிசி புதிய கல்விக்கொள்கைன்னு கொண்டு வந்து தமிழ்நாட்டுக்குள்ள ஹிந்தியையும், சமஸ்கிருத்தையும் நுழைக்கப் பாக்குறாங்க. இதுவரைக்கும் தமிழ்நாட்டுப் பக்கமே எட்டிப்பாக்காத அமித்ஷா- மோடி தேர்தல் வருதுன்னொன்னு வர ஆரம்பிச்சு இருக்காங்க. ஏன்னா அவங்க மட்டும்தான் வருவாங்க. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வராது, எந்தத் திட்டமும் வராது.

முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி
சமீபத்துல ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் பண்ணாங்க. அந்தப் பட்ஜெட்டுல பாத்தீங்கன்னா தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டத்தையும் ஒதுக்கல. ஆனா, அவங்க பட்ஜெட்டை முழுசா படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே தமிழ்நாட்டுல இருந்து ஒரு பாராட்டு குரல். யாரு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அதனாலதான் பட்ஜெட் சூப்பர்னு டயர் புகழ் பழனிச்சாமி இன்னைக்கு ஃபயர் விட்டுக்கிட்டு இருக்காரு. அதனாலதான் அடிக்கடி சொல்லுவேன். அரசியல்ல நாம பல பேர் முரட்டு பக்தர்களைப் பாத்துருப்போம். முரட்டுத் தொண்டர்களைப் பாத்துருப்போம். ஆனா இன்னைக்கு ஒரு முரட்டு அடிமையா எடப்பாடி பழனிச்சாமி, மோடிக்கு மாறி இருக்காரு.
நீங்கத் தொலைக்காட்சில பாத்து இருப்பீங்க. மூன்று நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு தியேட்டர்ல போய்ப் படம் பாக்குறாரு. எம்ஜிஆர் நடிச்ச படம் பாத்து ஒரே கண்கலங்குகிறார். அழுவுறாரு. நான் யோசிச்சு பாத்தேன். இந்நேரம் எம்ஜிஆர் உயிரோடு இருந்தா இருந்திருந்தாருன்னா இவர பாத்து என் கட்சியை இப்படி ஆக்கிட்டீங்களேன்னு பாத்து எப்படி அழுது இருப்பாருன்னு யோசிச்சு பாத்தேன்.
அதிமுக விற்றுவிட்ட எடப்பாடி
2019-ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வச்சார்.. 2021-ல் அதிமுகவை பாஜகவுக்கு லீஸ்க்கு விட்டாரு. இப்போ 2026-ல் அதிமுகவை பாஜகவுக்கு மொத்தமா வித்துட்டாரு.
தன்னுடைய சுயநலத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை அழிவுப் பாதையில் கொண்டு போயிட்டு இருக்கிறாரு. ஆனா, நம்முடைய தலைவர் அவர்கள் நம்முடைய தமிழ்நாட்டை அறிவுப் பாதையில் நம்முடைய தலைவர் அவர்கள் அழைச்சிட்டு போயிட்டு இருக்கிறாரு. அதனாலதான் சங்கிகளுக்கு தமிழ்நாட்டை பார்த்தாலே எப்பொழுதுமே ஒரு வயித்தெரிச்சல்.
ராணுவம்.. மிசாவையே பார்த்தது திமுக
எப்படியாவது மிரட்டுனா உருட்டுலாம்னு ஈடி, சிபிஐ இப்படி பல்வேறு அமைப்புகளை வச்சு மிரட்டிட்டு இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் நம்முடைய ஸ்டாலின், மதுரையில தெளிவா ஒரு பதில் சொன்னாங்க. என்ன வழக்கு தான போடுவீங்க? திமுக உடன்பிறப்புகள் பாக்காத வழக்குகளா? மொழிப்போரில ராணுவத்தையே எதிர்த்து நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மிசாவை பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். உயிரே போனாலும் எங்களுடைய சுயமரியாதையை நாங்க என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டுடைய உரிமைகளை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனாலதான் அடிக்கடி நான் சொல்லுவேன். நாங்க ஈடிக்கும் பயப்படமாட்டோம். மோடிக்கும் பயப்படமாட்டோம். மோடி இல்ல மோடி டாடி வந்தாலும் நாங்க பேஸ் பண்ண தயாராக இருக்கிறோம்.
திராவிட இன்ஜின்
இந்த லட்சணத்துல மோடி, தமிழ்நாட்டுக்கு வந்து பேசுறாரு. என்ன டபுள் இன்ஜின் சர்க்கார் வேணுமா? தமிழ்நாட்டுக்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேணும்னு மோடி சொல்றாரு. தமிழ்நாட்டுடைய இன்ஜின் பலமான ஒரு திராவிட மாடல் இன்ஜின். இது எப்பவுமே தனி ட்ராக்கில் முன்னேறிப் போயிட்டு இருக்குற இன்ஜின். நம்மகிட்ட இருக்குற இன்ஜின் கிரோத் இன்ஜின். நம்மகிட்ட இருக்குற இன்ஜின் டெவலப்மெண்ட் இன்ஜின். நம்மகிட்ட இருக்குற இன்ஜின் ப்ரோக்ரசிவ் இன்ஜின். இன்னைக்கு மகளிருக்கான விடியல் பயண திட்டத்தை மோடி- விமர்சனம் பண்றாரு. மகளிர் எல்லாரும் பஸ்ல போயிடறாங்க. அதனால மெட்ரோவுக்கு கூட்டம் வர மாட்டேங்குது அப்படின்னு சொல்றார் மோடி.
அதே மெட்ரோக்கு நாம நிதி கேக்கும்போது கோயம்புத்தூருக்கும் மதுரைக்கும் நிதி கேட்டோம். அந்த நிதியை மெட்ரோ நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கல. இதுல மகளிர் விடியல் பயணத்தை எப்படியாவது ரத்து செய்யணும் அப்படின்னு மோடி அவர்கள் விமர்சனம் பண்றாரு. நீங்கக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு பழமொழி ஜாடிக்கு ஏத்த மூடினு சொல்லுவாங்க. அது மாதிரி இன்னைக்கு மோடிக்கு ஏத்த ஒரு அடிமையா எடப்பாடி பழனிச்சாமி கிடைச்சு இருக்காரு.
வெறுப்பு அரசியலை பரப்பும் பாஜக
இன்னைக்கு பாஜகவுடைய நோக்கம் மக்களை எப்படியாவது தொந்தரவு பண்ணி வதைச்சு வெறுப்பை பரப்பணும். அதனால ஒவ்வொரு மாநிலமா வெறுப்பு அரசியலை பரப்பிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல வாலாட்டுலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. நிச்சயாம் நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர் இருக்கின்ற வரைக்கும் பாஜகவுடைய கலவர அரசியலை தமிழ்நாட்டு மக்கள் உள்ள நுழைய விடமாட்டாங்க. போன வாரம் காரைக்கால் வந்த அமித்ஷா, தொலைக்காட்சில பாத்து இருப்பீங்க. செய்திகள்ல பாத்து இருப்பீங்க. ஒரு செவுத்துல பெயிண்ட் அடிச்சுட்டு இருந்தாரு. நீங்க எவ்வளவுதான் பெயிண்ட் அடிச்சாலும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களுடைய சங்கிக் கூட்ட முகத்துல கரியைத் தான் நிச்சய தமிழ்நாட்டு மக்கள் பூசுவாங்க. இப்ப நடக்கிறது எட்டு கோடி மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு போர். பாசிஸ்டுகள், அடிமைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வராங்க. தமிழ்நாட்டை எப்படியாவது சீரழிக்கணும்னு முயற்சி பண்றாங்க. அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணியினர் நிர்வாகிகள் உங்களோட கைகள்ல இருக்கு. நிர்வாகிகள் எல்லாம் ஒரு அன்பு வேண்டுகோள். உங்களுடைய வீட்டை முதல்ல அரசியல் படுத்துங்க. தினமும் உங்க வீட்டுல இருக்கிறவங்களோட அரசியல் பேசுங்க. விவாதம் பண்ணுங்க. டெல்லி பாசிஸ்டுகளும், உள்ளூர் அடிமைகளும் தமிழ்நாட்டுக்கு என்னெல்லாம் துரோகம் செஞ்சிருக்காங்கன்னு எடுத்துச் சொல்லுங்க.
வீடு தோறும் பிரசாரம்
குடும்பம் மிக மிக முக்கியம். அதைவிட முக்கியம் உங்களுடைய அடுத்த தலைமுறையினர். அதனால தான் நாம இத்தனை விஷயங்களை போராடிகிட்டு பண்ணிட்டு இருக்கிறோம். வீடு நல்லா இருந்தாதான் நாடு நல்லா இருக்கும்னு பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கப் பணியாற்றணும். ஒவ்வொரு வீடா போய்க் கழகத்துடைய கொள்கைகளையும், அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுங்க. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெறும் ஐம்பது நாட்கள் தான் இருக்கு. இந்த ஐம்பது நாட்களுக்கு நீங்க கொடுக்கப்போற உங்களுடைய உழைப்பு அடுத்த ஐந்து வருஷத்துக்கு தமிழ்நாட்டை காப்பாத்த போகுதுங்கிறதை மனசுல வச்சுக்கிட்டு உங்களுடைய பணிகளைச் செய்ங்க…. இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கின்ற ஒரு ஜனநாயகப் போர். இந்தப் போர்ல தமிழ்நாடு நிச்சயம் ஜெயிச்சு காட்டும். டெல்லிக்கு என்னைக்குமே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தமிழ்நாடு அப்படிங்கிறதை தமிழ்நாட்டு இளைஞர்கள் ப்ரூவ் பண்ணி காட்ட வேண்டிய நேரம். அதுக்கு இளைஞரணி நிர்வாகிகள் உங்களுடைய உழைப்பு மிக மிக முக்கியமானதாக இருக்கணும். நான் அடிக்கடி சொல்றதுண்டு. இளைஞரணியில் சரியாக உழைச்சீங்கன்னா உங்களுக்கான அங்கீகாரத்தை நம்முடைய தலைவர் அவர்கள் நிச்சயம் சரியான நேரத்துல கொடுப்பார். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கணும்னு தலைவரிடம் என்னுடைய வேண்டுகோளைப் பலமுறை வச்சிருக்கேன். நிச்சயம் தலைவர் அவர்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதனால உற்சாகமா வேலை செய்யுங்க.
குழி வெட்டுனா 18 அடி வளருவோம்
இன்னைக்கு சில பேர் நம்முடைய இயக்கத்தை அழிச்சிடலாம்னு பகல் கனவு காண்கிறாங்க.. . நம்மள யாராலயும் எந்த நேரத்திலும் அழிக்க முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா சொன்னது, எங்கள அழிச்சு புதைக்கலாம்னு நீங்க நாலு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீங்க. நீங்கக் குழியை வெட்டுறதுக்குள்ள நாங்க ஆறடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக ஆறடிக்கு ஒரு குழியை வெட்டுவீங்க. நீங்கக் குழியை வெட்டுறதுக்குள்ள நாங்க எட்டு அடி வளர்ந்திருப்போம். உடனே எங்களுக்காக எட்டு அடிக்கு ஒரு குழியை வெட்டுவீங்க. அதுக்குள்ள நாங்க பதினாறு அடி வளர்ந்திருப்போம். நீங்க எங்கள வெட்ட நினைச்சீங்கன்னா நாங்க வளர்ந்துகிட்டே இருப்போம் அப்படின்னு பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய கழக இளைஞரணியை பார்த்துச் சொன்னார். அதே போல உங்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இத்தனை ஆயிரம் உடன்பிறப்புகள் இருக்கின்ற வகையில் நாங்க வளர்ந்துகிட்டே தான் இருப்போம். தவிர உங்களால எங்கள அழிக்கவே முடியாது. இங்க கூடி இருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞரணி தம்பி மார்கள் சார்பாக நான் மீண்டும் சொல்கிறேன் எங்களுடைய உதய சூரியன் அப்படிங்கிறது வெறும் ஏதோ செவுத்துல வரைஞ்சு வைக்கிற சின்னம் கிடையாது. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருத்தர் அவர்களுடைய இதயத்திலும் ரத்தத்திலும் ஊறிப்போன சின்னம் உதய சூரியன். அண்ணா கண்டுபிடித்த சின்னம் உதய சூரியன். கலைஞர் கட்டிக்காத்த சின்னம் உதய சூரியன். தலைவர் அவர்களால வெற்றியை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஒரு சின்னம் உதய சூரியன். உயிர் போனால் போகுமே தவிர உதய சூரியன் எங்களை விட்டுப் போகாது. எத்தனை பேர் வந்தாலும் யாரு எங்களை எதிர்த்து நின்னாலும் களத்தில் ஜெயிச்சு மீண்டும் ஆட்சி அமைக்கப்போறது உதய சூரியன் தான்.
டார்கெட் 200 தொகுதிகள்
நம்முடைய தலைவர் அவர்கள் நமக்கு ஒரு டார்கெட் கொடுத்திருக்காங்க. மினிமம் 200 தொகுதி வெல்வோம் 200 படைப்போம்
ஆகவே பத்து தோல்வி பழனிச்சாமியும் மொத்த தோல்வி. மோடியையும் மறுபடியும் நீங்க விரட்டி அடிக்க வேண்டும். கழக அணியுடைய வெற்றிக்கணக்கு இந்த மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கணும். கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கணும். நம்முடைய தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாக்கால உக்காரனும்னா நீங்க ஒவ்வொருத்தரும் இரவு பகல் பாக்காமல் பணியாற்றுங்க. மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் உங்ககிட்ட இருக்கின்ற உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது நம்முடைய வெற்றி நிச்சயம் உறுதி என்கிறதை நான் இங்க சொல்லிக் கொள்கின்றேன். சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இளைஞரணியினுடைய பங்கு மிக மிக முக்கிய காரணமாக இருக்கணும். உங்க அத்தனை பேருடைய பணிகளும் சிறக்கட்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
