சனாதனம் பற்றி பேசியதற்காக, ஜீயரைக் கூப்பிட்டு பரிகாரம் செய்ததாக வதந்தி பரப்புகிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோவில், ” சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதால் அவருக்கு பிராமண தோஷம் ஏற்பட்டது.
தோஷத்தை நீக்க ஸ்ரீவல்லிபுத்தூர் ஜீயர் சுவாமி, ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமி ஆகிய மூன்று பேருக்கும் பாதபூஜை செய்து உதயநிதி தோஷத்தை கழித்துள்ளார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர்.
இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று (டிசம்பர் 22) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் இதுதொடர்பாக விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் மீது எந்த குற்றச்சாட்டையும் அதிமுக, பாஜகவால் சொல்ல முடியவில்லை. அதனால் தான் வெறும் வதந்தியை மட்டும் பரப்பி வருகிறார்கள். கடந்த வாரம் என்னைப் பற்றி ஒரு வதந்தி வந்தது.
சனாதனம் பற்றி பேசியதற்காக, சாமியாரிடம் சென்று நான் பரிகாரம் செய்ததாக வதந்தி பரப்பினார்கள். சனாதன விவகாரத்தில், என்னுடையை தலையை வெட்டுவேன், மன்னிப்பு கேளுங்கள் என்றார்கள். மன்னிப்பு கேட்க முடியாது என்றேன்.
அனைத்து மாநில நீதிமன்றங்களிலும் என் மீது வழக்கு தொடர்ந்தார்கள். அதற்கும் நான் பயப்படவில்லை. நான் சாமியாரிடம் போய் பரிகாரம் கேட்பேனா? அந்த செயலில் ஈடுபடுவேனா? நான் கலைஞரின் பேரன். என்னுடைய கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு சொல்லும் எதையும் எப்போதுமே எதிர்ப்போம். சமத்துவ சமுதாயம் அமைப்பது தான் எங்களது இலக்கு” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…