‘ஜாடிக்கு ஏத்த மூடி’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில் நேற்றே காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இன்று பிற்பகல் திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “உங்களுடைய வேட்பாளர், ஏற்கனவே உங்களால பலமுறை வெற்றியைப் பெற்றிருக்கக்கூடிய வேட்பாளர் அண்ணன் எ.வ.வேலுவை தலைவர் உங்களுக்காக ஒப்படைச்சிருக்காங்க. அவரைப் பத்தி உங்ககிட்ட பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லை. அவருடைய ஆற்றலையும், அவர் அனுபவம் அத்தனையும் உங்களுக்கு அத்துப்படி.
‘எல்லாரும் ஏவினாதான் வேலை செய்வாங்க, ஆனா நான் ஏவாமலேயே வேலையைச் செஞ்சு முடிக்கிறவர் எ.வ.வேல் ‘னு கலைஞரே சொல்லியிருக்காரு
அதுமட்டும் இல்ல, எதிலும் வல்லவர் வேலுன்னு நம்முடைய தலைவர் சொல்லிருக்காங்க. உங்களுடைய வேட்பாளர் எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதைச் சரியா கச்சிதமா செய்து முடிக்கக் கூடியவர்.
அவரை கடந்த முறை 95,000 வாக்கு வித்தியாசத்துல நீங்க ஜெயிக்க வச்சிருக்கீங்க. இந்த முறை… இந்த முறை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைப்பீங்களா? நிச்சயம் பண்ணுவீங்களா? செஞ்சு காட்டணும்.
இன்னைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு கட்டமைப்புகள், பல்வேறு பில்டிங்ஸ் எல்லாத்தையும் கட்டி முடிச்சிருக்கிறார் வேலு. பெருமையோடு இருக்கக்கூடிய அனைத்துக் கட்டிடங்கள், மாவட்டந்தோறும் இருக்கக்கூடிய பிரம்மாண்ட லைப்ரரிஸ், நூலகங்கள், நினைவு மண்டபங்கள், மெரினா பீச்சிலே அமைந்திருக்கக்கூடிய கலைஞர் நினைவிடம், கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்தப் கண்ணாடிப் பாலம், திருவாரூர் கலைஞர் கோட்டம் – இப்படி எல்லாமே அண்ணன் வேலுவுடைய உழைப்பினால கட்டப்பட்டது. அவருக்காக உரிமையோடு உங்ககிட்ட வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக விமரித்தார்.
“நாம இவ்வளவு வளர்ச்சித் திட்டங்களைச் செஞ்சிருக்கிறோம், இவ்வளவு வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம், நிறைவேற்றிக் காட்டிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தா இதையெல்லாம் செய்வோம்னு சொல்லிருக்கிறோம். ஆனா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன பண்ணிட்டு இருக்காரு? இன்னைக்கு மீண்டும் பாஜக-வோட அடிமையாகி தமிழ்நாட்டுக்குள்ள மோடியையும் அமித் ஷாவையும் எப்படியாவது தமிழ்நாட்டுக்குள்ள கூட்டிட்டு வரணும்னு வேலை பாத்துட்டு இருக்கிறார்.
‘ஜாடிக்கு ஏத்த மூடி’ன்னு சொல்லுவாங்க, இன்னைக்கு எடப்பாடி பழனிசாமிதான் மோடிக்கு ஏத்த ஒரு அடிமை எடப்பாடி பழனிசாமியா மாறியிருக்கிறார். நான் அடிக்கடி சொல்லிருக்கேன் நகைச்சுவையா – முரட்டு பக்தர்கள் பார்த்திருக்கிறோம், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், இன்னைக்கு எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே ஒரு நம்பர் ஒன் முரட்டு அடிமையா, மோடியுடைய அடிமையாக இன்னைக்கு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அவருக்குச் சரியான பாடத்தைக் கற்றுக்கொடுக்கணும். நம்ம தலைவர் சொன்ன மாதிரி இந்தத் தேர்தல் ‘தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி’ தேர்தல்.
நம்முடைய உரிமைகளை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுக்கணும். தமிழ்நாடு என்னைக்கும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் அப்படிங்கறது இந்தத் தேர்தல் மூலம் நீங்க நிரூபிப்பீங்களா? அதை கண்டிப்பா செய்வீங்க அப்படிங்கற அந்த நம்பிக்கையோட உங்களை எல்லாம் அன்போடு , பண்போடு, பாசத்தோடு, உரிமையோடு கேட்கிறேன்” என்று வாக்கு சேகரித்தார்.
