‘ட்ரெய்லர்’ போன்றே படமும் இருக்கிறதா?
ஒரு படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிற சில உத்திகள் நேர்த்தியாக அமையாவிட்டாலும், அவற்றின் உள்ளடக்கம் நம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். உள்ளடக்கத்தில் சில பிசிறுகள் இருந்தாலும், புதிதாகத் திரையனுபவம் கிடைக்குமென்ற உத்தரவாதத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அப்படியொரு எண்ணத்தைத் தோற்றுவித்தது பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல் அமீர், ஜான்விகா உள்ளிட்ட பலர் நடித்த ‘அக்யூஸ்டு’ பட டீசர் மற்றும் ட்ரெய்லர்.
சரி, அவற்றைப் போன்றே முழுப்படமும் புதியதொரு திரையனுபவம் கிடைக்கச் செய்கிறதா?

’மைனா’ பிரதிபலிப்பு!
சென்னையிலுள்ள புழல் சிறையில் ஒரு விசாரணை கைதி இருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் கொலை வழக்கில் அவரைக் கைது செய்திருக்கின்றனர் போலீசார். நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அதற்கு முந்தைய நாள், புழலில் இருந்து அவரைச் சேலம் சிறைக்கு மாற்றுவதாகத் திட்டம். அதனைச் செயல்படுத்த ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
அதிலொருவருக்குப் பதிலாக, தன் வீட்டில் வேலை செய்கிற ஒரு கான்ஸ்டபிளை திடீரென்று அனுப்பி வைக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
கைதி அழைத்துக்கொண்டு செல்லும்போது, சிலர் அந்த வாகனத்தை வழிமறித்து தாக்க முற்படுகின்றனர். உடன் செல்லும் இன்ஸ்பெக்டரே ஒரு ‘போலி என்கவுண்டரு’க்கு தயாராகிறார்.
ஆனால், இது பற்றித் துளி கூட அறியாமல் அந்த கைதியும் இளம் கான்ஸ்டபிளும் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஒருகட்டத்தில் கூலிப்படையினரால் கைதியின் உயிர் கேள்விக்குறியாக, அவரைக் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதையே முழுமூச்சாகக் கொள்கிறார் அந்த கான்ஸ்டபிள்.
அந்த கான்ஸ்டபிளால் அதனைச் செய்ய முடிந்ததா? ஆபத்துகள் சூழும் அளவுக்கு எத்தகைய குற்றத்தைச் செய்தார் அந்த விசாரணை கைதி?
மேற்சொன்ன கேள்விகளோடு வேறு சிலவற்றுக்கும் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.
கிட்டத்தட்ட பிரபு சாலமோனின் ‘மைனா’வை லேசாகப் பிரதிபலிக்கிறது ‘அக்யூஸ்டு’.
அதேநேரத்தில், அந்த கைதியின் பார்வையில் முழுக்கதையும் விவரிக்கப்படுகிறது. கூடவே, அவர் நல்லவரா, கெட்டவரா என்றும் சொல்கிறது. அதுவே இப்படத்தில் இருக்கிற வித்தியாசங்கள்.

ஈர்க்கிறதா?
நாயகன் உதயாவின் நடிப்பு எளிதாக நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. என்ன, அவரது தாடியும் தலைமுடியும்தான் ‘செயற்கையாக’த் தெரிகிறது. இடைவேளைக்குப் பின் வருகிற இரண்டு காட்சிகளில் ‘சிறப்பான’ நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அஜ்மல் அமீருக்கு இதில் இன்னொரு நாயகன் போன்றதொரு பாத்திரம். அதனைச் சிறப்புறத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக வரும் ஜான்விகா சட்டென்று வசீகரித்தாலும், அவரது இருப்பைச் சொல்லும் வகையில் ‘முத்திரை’ காட்சிகள் தரப்படவில்லை.
யோகிபாபு இடைவேளைக்கு அருகாமையில் தலைகாட்டியிருக்கிறார். ஆனாலும் பின்பாதியைக் கலகலப்பாக்கியதில் அவருக்குப் பெரும்பங்குண்டு. பல இடங்களில் அவர் சிரிக்க வைக்கிறார்.
என்ன, ‘பிரியாணி’ செய்வதாக வரும் பாடலில் மட்டும் ’குத்து டான்ஸ்’ தேவையின்றிச் சேர்க்கப்பட்டிருக்கிறது. போலவே, காமெடிக்காக ‘வாட்டர்மெலன்’ ஸ்டார் திவாகரும் ஒரு காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறார். அவை தேவையா என்பது ரசிகர்களின் பார்வையைப் பொறுத்தது.

இது போக பவன், அவரது மனைவியாக, சகோதரனாக நடித்தவர்கள், போலீஸ் அதிகாரியாக வரும் பிரபு ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்கள், தயாரிப்பாளர் சிவா என்று சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அவர்களது பாத்திரங்களை இன்னும் கூடத் திரைக்கதையில் சிறப்புறக் காட்டியிருக்கலாம்.
படத்தில் பெரும்பாலான இடங்களில் ‘கேண்டிட்’ ஷாட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை இடம்பெறுகிற காட்சிகள் அனைத்துமே கதைக்கருவுடன் நம்மைப் பிணைக்கின்றன.
அந்த வகையில் ஒளிப்பதிவாளர் மருதநாயகம், கலை இயக்குனர் ஆனந்த் மணி, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோரின் பங்களிப்பு அபாரமானது.
பின்னணி இசையில் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் ஈர்க்கிறார். பாடல்கள் சட்டென்று முதன்முறை கேட்கும்போதே மனதோடு ஒட்டிக்கொள்கிற வகையில் இல்லை.
சில காட்சிகள் அவசர கதியில் படம்பிடிக்கப்பட்டதாகத் தெரிகின்றன. சிலவற்றில் ‘பட்ஜெட் போதவில்லையோ’ என்ற எண்ணம் எழுகிறது. அது போன்ற விஷயங்களே, ஒட்டுமொத்தமாகப் படம் பார்க்கிறபோது காட்சியாக்கத்தில் தென்படுகிற சீர்மையைக் குலைத்திருக்கின்றன. அதனைச் சரிப்படுத்தும் வகையில், கமர்ஷியல் அம்சங்களுக்காகச் சேர்க்கப்பட்ட சில காட்சிகளையும் நீக்கியிருக்கலாம். அதனைச் செய்யாததே ‘அக்யூஸ்டு’வின் பெரும் பலவீனம்.
இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் இப்படத்தில் இருக்கிற சில கதாபாத்திரங்களை இன்னும் விரிவாகத் திரையில் காட்டத் தவறியிருக்கிறார். போலவே, நாயகனின் தேவையற்ற சில பக்கங்களை விரிவாக விவரித்திருக்கிறார். இரண்டையும் சரிப்படுத்தியிருந்தால் ‘அக்யூஸ்டு’ யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு சினிமாவாக மலர்ந்திருக்கும்..
முக்கியமாக, ‘ட்ரெய்லரில்’ கிடைக்காத திருப்தி படத்தில் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. அது பொய்த்திருப்பதில் நமக்கு வருத்தம் தான்..!