ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை, நயினார் நடத்திய ‘அந்த இரு சந்திப்புகள்’.. ஜெயிக்கப் போவது யாரு? டெல்லி விசிட் ஏன்?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘பம்பரம் கூட தோற்றுப் போகும் போல’ என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

பம்பரமாக பிரசாரம் செய்றாங்கன்னு சொல்றீங்களோ?

ADVERTISEMENT

ஆமாய்யா.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அக்டோபர் 16-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்குகிறார். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து பிரசாரம் தொடங்குது.. ஒரு நாளைக்கு 3 தொகுதிகள்னு கணக்கு போட்டு பிரசாரம் செய்ய போறாரு..

அது விஷயமாத்தான் எடப்பாடியை சந்திச்சாரா?

ADVERTISEMENT

சேலத்தில் நேற்று (செப்டம்பர் 21) எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனுடன் போய் சந்தித்தார் நயினார் நாகேந்திரன்.

எடப்பாடி பழனிசாமியிடம், பிரசார பயணத்தில் கலந்துகிட்டு மதுரை பொதுக் கூட்டத்தில் பேசனும்னு கேட்டுகிட்டாரு நயினார். எடப்பாடியோ, ‘நம்ம புரோகிராம் ஏற்கனவே பிக்ஸ் ஆகி போய்கிட்டு இருக்கு.. எப்படி வாய்ப்பிருக்குன்னு தெரியலையே.. பார்க்கிறேன்’ என பட்டும்படாமல் சொல்லி இருக்கிறார்.

ADVERTISEMENT

எடப்பாடியின் இந்த பதிலை எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் மீண்டும், ‘கட்டாயம் நீங்க வரனும் அண்ணே’ என அழுத்திச் சொல்ல, அப்போதும் பிடிகொடுக்காமல், நிச்சயம் முயற்சிக்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டாராம்.. எடப்பாடியின் இந்த பதிலில் நயினார் கொஞ்சம் அப்செட்தானாம்..

எடப்பாடியை சந்திச்ச மறுநாளே டெல்லி போய்ட்டாரே நயினார்?

நயினாரை டெல்லி அழைச்சிருக்குன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க.. இப்ப போயிருக்காரு.. செங்கோட்டையன், எடப்பாடியை தொடர்ந்து நயினார் டெல்லிக்கு போயிருக்காருங்கிறதால எல்லோரும் ரொம்ப எதிர்பார்க்கிறாங்க..

டெல்லியில் என்ன புரோகிராமாம்?

டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்து பேசுறாரு.. ஶ்ரீவில்லிப்புத்தூரில் தொடங்குகிற பிரசார பயணமும் பற்றி பேச இருக்கிறாராம் நயினார்.. அதோட, ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில கொண்டு வருவது பற்றியும் பேசனும்னு நினைக்கிறாராம் நயினார்.. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஓபிஎஸ்ஸிடம் பேசியிருந்தார் நயினார்.. அப்ப ஓபிஎஸ் சொன்ன விஷயங்களை ஜேபி நட்டாவிடம் பாஸ் செய்துவிட்டு, ‘க்ரீன் சிக்னல்’ வாங்கிடனும்னு ரொம்பவே மெனக்கெடுறாரு நயினார்..

அங்கிட்டு நயினார்- எடப்பாடி.. இங்கிட்டும் சந்திப்பாமே?

ஆமாப்பா.. சென்னையில் நேற்று இரவு (செப்டம்பர் 21) திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டுக்கு போனாரு அண்ணாமலை..

நேற்று போனது ஏன் இவ்வளவு லேட்டா வெளியே வருது?

டிடிவி தினகரனை சந்திக்க தனியாகவே போயிருக்காரு அண்ணாமலை.. டிடிவி வீட்டுல இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டுதான் போனார்..

அப்ப ‘ரகசியமான’ சந்திப்பா?

அப்படித்தான் நினைச்சாரு போல.. இப்ப லீக் ஆயிடுச்சு.. செப்ம்பர் 19-ந் தேதி டிஜிட்டல் திண்ணையில, “டிடிவியை எப்படியாவது பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சேர்க்கனும்; டெல்லி மேலிடம் தட்டி கொடுக்கனும்” என அண்ணாமலை முயற்சிக்கிறார் என சொல்லி இருந்தோம்.. அதேபோலவே டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசினார் அண்ணாமலை.

முக்கியமா என்ன பேசுனாங்களாம்?

டிடிவியை பொறுத்தவரைக்கும் பாஜக கூட்டணிக்கு திரும்ப வரனும்னா, சிஎம் வேட்பாளர் யாருன்னு சொல்லனும்; நிச்சயமாக எடப்பாடியை ஏத்துக்கவே முடியாதுன்னு உறுதியாக இருக்காரு.. அண்ணாமலையுடன் பேசிய போதும் இதையே சொல்லி இருக்கிறாரு தினகரன்.

அண்ணாமலையோ, “அமித்ஷா ஜியை சந்திக்கும் போது உங்களுக்கு எல்லா சரியாகிடும் அண்ணா.. இப்போதைக்கு சிஎம் வேட்பாளர் பற்றி பேசவேண்டாம்.. உங்க முடிவை மறுபரிசீலனை செய்யுங்க அண்ணா” என்றாராம்.

டிடிவி தினகரன் வீட்டில் நைட் டின்னர் சாப்பிடும் போது ‘சில’ விஷயங்களை ஷேர் செய்திருக்கிறார் அண்ணாமலை. சுமார் 1.30 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு, விருந்துக்கு பின் ‘நிச்சயம் நல்லதே நடக்கும் அண்ணா’ என சொல்லியபடி விடை பெற்றாராம் அண்ணாமலை.

“டிடிவியை பாஜக கூட்டணியில் கொண்டு வந்துவிட்டால் டெல்லி மீண்டும் தம்மை அரவணைச்சுக்கும் என்ற நம்பிக்கையில் ரொம்பவே “வேலை” செய்யுறாரு அண்ணாமலை.. ரிசல்ட்டு தெரியத்தான் போகுது” என கமலாலய வட்டாரங்கள் நமட்டுச் சிரிப்புடன் கமெண்ட் அடிக்கின்றன என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share