முன்விரோதம் காரணமாக பிரியாணி கடை சிக்கன் குழம்பில் பல்லியை போட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் புரூக்பாண்ட் ரோட்டில் உமாபதி என்பவருக்கு சொந்தமான ‘கோவை பிரியாணி கடை’ செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் கடந்த மே மாதம் 26ம் தேதி ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த 5 பேர் சாப்பிட வந்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி இருந்ததாக குற்றம் சாட்டினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரியாணி கடை உரிமையாளர் உமாபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து குமாரபாளையத்தை சேர்ந்த கலையரசன், அண்ணாத்துரை, சரவணன், முருகன், நடராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, உமாபதியுடன் இருந்த முன்விரோதம் காரணமாக கடை வியாபாரத்தை முடக்கும் நோக்கில் அவர்கள் குழம்பில் பல்லியை போட்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் நடராஜன் முன் ஜாமின் பெற்றார். அண்ணாதுரை, சரணவன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (ஜூலை 30) கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.