தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்பமனு வாங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என தவெக கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் வரும் பிப்ரவரி 6 வெள்ளிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
