”உங்களுக்கு வேணா 40க்கு 40னா எலெக்சன் ரிசல்டா இருக்கலாம். ஆனா இந்த டெல்டா விவசாயிகளுக்கு 40/40னா அவங்க வயித்துல அடிச்சி நீ வாங்குன கமிஷன் தான் என விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி இன்று (செப்டம்பர் 20) காலையில் நாகை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார் விஜய்.
அங்கு வழக்கமாக அணியும் தனது கட்சித் துண்டுக்கு பதிலாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பச்சைத் துண்டு அணிந்தபடி தெற்கு வீதியில் பேசினார் விஜய்.

அவர் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் ’உங்களுடன் ஸ்டாலின்’ என பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் அவர் தான் மக்களுடன் இல்லையே. இது நான் சொல்லவில்லை. ஒரு பிரபலமான பத்திரிகை சொன்னது.
இந்த டெல்டா பகுதி விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவிச்சிட்டு வர்றாங்க. அது என்னவென்றால், இந்த மாவட்டத்தில் இருக்கிற கொள்முதல் மையங்களில் நெல்லை ஏத்தி இறக்குறதுக்கு ஒரு 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குறாங்க. அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனால் இவங்க அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்க.
ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, இந்த 4 வருசத்துல பல கோடிகள் இந்த டெல்டா பகுதியில் இருக்குற விவசாயிகள் கிட்ட இருந்து கமிஷனா பிடுங்குருக்காங்க. இதை யார் சொன்னாலும் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை என்கிட்ட சொன்னதே விவசாயிகள் தான்.
விவசாயிகள் பொய் சொல்ல மாட்டாங்க சி.எம் சார். இது உங்கள் ஆட்சியில் நடந்திருக்குது. உங்களுக்கு வேணா 40க்கு 40னா எலெக்சன் ரிசல்டா இருக்கலாம். ஆனா இந்த டெல்டா விவசாயிகளுக்கு 40/40னா அவங்க வயித்துல அடிச்சி நீ வாங்குன கமிஷன் தான். இது உங்க ஆட்சில நடந்திருக்குது சி.எம் சார். இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” என விஜய் பேசினார்.

தொடர்ந்து அவர், “நண்பா ஒரு டவுட்… எங்க போனாலும் இது சும்மா கூடுற கூட்டம். ஓட்டுப்போட மாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இதென்னா சும்மா கூடுன கூட்டமா?” என்றார். அதற்கு அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் ’டிவிகே.. டிவிகே’ என உற்சாக கோஷம் எழுப்ப, அவர்களுக்கு நன்றி தெரிவித்து திருவாரூரில் இருந்து விடைபெற்றார் விஜய்.