அதிமுக – பாஜக கூட்டணியில் நடிகர் விஜய், சீமான் கட்சிகள் இணைய எடப்பாடி பழனிசாமி அழைப்ப்பு விடுத்த நிலையில், இருவரும் இன்று (ஜூலை 22) மறுப்பு தெரிவித்துள்ளனர். tvk vijay and ntk seeman rejects eps call
2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணியை வலுப்படுத்துவதில் திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி வலுவாக காணப்படுகிறது.
அதே வேளையில் ஆளும் திமுகவை எதிர்த்து அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. எனினும் ஆட்சியில் பங்கு என்பதில் இரு கட்சியினரிடையே வேறுபட்ட கருத்து நிலவி வருகிறது.
விஜய், சீமான் கட்சிக்கு அழைப்பு!
இந்த நிலையில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், “திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்த விஷயத்துக்கு அதற்குள் ஒரு தெளிவு பிறக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ”திமுகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் விஜய்யும் விரும்புகிறார். இந்த அழைப்பு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடியின் அழைப்பை மறைமுகமாக நிராகரித்து தவெக தரப்பில் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் விஜய்!
அதில், “மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிமுகவின் அழைப்பை மீண்டும் நிராகரித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
அதே போன்று விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடமும் எடப்பாடியின் கூட்டணி அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
எல்லோரையும் வீழ்த்த வேண்டும்!
அதற்கு அவர், “பாஜக வரக்கூடாது என்று ஓரணியில் தமிழ்நாடு என்று ஒருபக்கம் திமுக கூட்டணி உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று இன்னொரு அணி. ஆனால் நாங்கள் மட்டும் தான் இவர்கள் எல்லோரையும் வீழ்த்த வேண்டும் என ஒரே அணியாக இருக்கிறோம்.
எங்களுக்கு என்று ஒரு கோட்பாடு உள்ளது. தேசிய கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதற்கு? காங்கிரஸ், பாஜக தமிழ்நாட்டிற்காக நிற்குமா? ஒரு தீமைக்கு மாற்று இன்னொரு தீமை இல்லை. நெருப்பை நெருப்பு வைத்து அணைப்பது கடினம்” என சீமான் பேசினார்.