வடமாநில சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தமிழருக்கு குறைவாகவே தெரிந்துள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது: வடமாநில சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தியையும், சுபாஷ் சந்திராபோஸையும், அண்ணல் அம்பேத்கரையும் தமிழர்களான நாங்கள் அறிவோம் : கோட்சேவின் வாரிசான ஆர்.எஸ்.எஸ் ரவி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்!
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல் சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி
பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலில் ஒருவரான ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதன் முதலே, தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ் ரவி களமாடிக்கொண்டிருக்கிறார்.
நேரடியாக சொல்ல வேண்டுமானால், பாஜகவின் மாநில தலைவர் போன்றும், ஆர்.எஸ்.எஸ்-சின் பிரதிநிதியாகவும், அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தின்றுக்கொழுத்து விட்டு, அம்மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
அத்தகைய துரோகங்களின் தொடர்ச்சியாக, தற்போது வடமாநிலங்கள் குறித்தும், வடமாநில சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும், தென் மாநிலத்தவர்களுக்கு குறைவாகவே தெரிந்திருக்கிறது என்றும் இந்தியாவை எந்தவொரு அரசர்களும் உருவாக்கவில்லை என்றும் ரிஷிகள் தான் உருவாக்கியது என்றும் மீண்டும் மீண்டும் புராணக்கதைகளை கூறி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
தமிழைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாட்டில் நின்றுக்கொண்டு, தமிழர்களுக்கு பாடம் எடுக்கிறார்.
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கு பாடம் எடுக்கக் கூடிய அருகதை ஆர்.எஸ்.எஸ் ரவிக்கு கிடையாது. வடமாநில தியாகிகள் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார்? என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.
வடமாநில தியாகிகள் என்றால், எங்களுக்கு மகாத்மா காந்தியும், சுபாஷ் சந்திரபோஸூம், அண்ணல் அம்பேத்கரும் தெரியும். இவர்களை தவிர, அந்த வடமாநில தியாகிகள் என அவர் யாரை குறிப்பிடுகிறார்? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவையா?
முதலில் சுதந்திர போராட்டத்தியாகிகளை பற்றி பேச கோட்சே கும்பலின் அடியாளான ஆர்.என்.ரவிக்கு என்ன அருகதை இருக்கிறது?
இந்திய ஒன்றியத்தின் சுதந்திரத்திற்கு ஒரு துளி துரும்பைக் கூட எடுத்துப் போடாத ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அடியாள் ஆர்.என்.ரவி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை; அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஈடுபட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
