ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ‘காதுகள் ஜாக்கிரதை’.. விஜய் களமிறக்கப் போகும் ‘அந்த’ சின்னம் எது தெரியுமா?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘இனி விசில் சப்தம் காதை பதம் பார்த்துடும் போல..’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

யாரோட விசில் சப்தம்? விஜய் பிரசாரத்தை சொல்றீரா?

ADVERTISEMENT

விஜய் பற்றி சொல்லத்தான் நிறைய தகவல்கள் இருக்கு.. ஒவ்வொன்றாக சொல்றேன்..

‘சிவகாசி சீமை’யில் இருந்து வரும் தகவல்கள் அத்தனையும் விஜய்யை ரொம்பவே ‘குஷி’யாக்கி இருக்கிறதாம்..

ADVERTISEMENT

‘சிவகங்கை சீமை’யில் இருந்துன்னா பட்டாசுகளுக்கு ஆர்டர்களை குவிச்சுட்டாங்களா?

பட்டாசுகளுக்கு மட்டும்தானா? சிவகாசி அச்சகங்களே திணறிப் போகும் அளவுக்கு விஜய் படம் போட்ட காலண்டர்கள், டைரிகளுக்கான ஆர்டர்கள் மலைபோல குவிந்து கொண்டே இருக்கிறதாம்.. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் இருந்தும் இவ்வளவு ஆர்டர்கள் வந்து குவிந்ததே இல்லையாம்.. சிவகாசி அச்சகங்களே வெடி வெடித்து கொண்டாடித் தீர்க்கும் அளவுக்கு ஆர்டர்கள் குவிஞ்சிருக்காம்.. இந்த தகவல்தான் விஜய்க்கு சொல்லப்பட ஒரே குஷியாம்..

ADVERTISEMENT

குஷி படமும் ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆகி இருக்கு.. இதுல இந்த குஷியும் சேர்ந்துருச்சா?

அதுசரி.. விஜய் பிரசாரத்தை எட்டிப் பார்ப்போம்.. நாமக்கல், கரூர் இரண்டிலும் விஜய் இந்த வாரம் பிரசாரம்.. நாமக்கல்லில் விஜய் காலை 8.45 மணிக்கு பிரசாரம் செய்வார்னு அறிவிச்சாலும்.. முற்பகலில்தான் சென்னையில் இருந்தே கிளம்பினார்.. அதனால காலையில் இருந்தே கட்டுக்கடங்காத கூட்டம்..

விஜய்யின் கரூர் பிரசாரம்தான் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு..

இப்பதான் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியே ஒரு மாநாடு போல அமைதியாக கொட்டும் மழையில் நடந்தது.. பல லட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்றாங்க.. அதுக்கு அப்புறம் எடப்பாடி பழனிசாமி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்னு சுற்றி சுற்றி பிரசாரம் செஞ்சு மாஸ் காமிச்சுட்டு போயிருக்காரு..

இந்த வரிசையில விஜய்யும் கரூரில் செம்மையாக ‘கில்லி’ ஆடிட்டுதான் போயிருக்கிறாரு..

விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுதே.. இவங்களை எல்லாம் ஒழுங்குபடுத்த ஆட்களா இல்லை?

ஏன் ஆட்களா இல்லை? எத்தனையோ அரசியல் கட்சிகளில் இருந்து எவ்வளவோ பேரு நான் நீன்னு விஜய் கட்சிக்கு போகலாம்னு ரொம்பவே முட்டி மோதறாங்கதான்..

ஆனா விஜய் ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமிதான், அத்தனை பேரையும் அணை போட்டு தடுத்து வெச்சுகிட்டே இருக்காரு.. அவரு வந்தாலும் இவரும் வந்தாலும் உங்களுக்கு அப்படி தொல்லை.. இப்படி தொந்தரவுன்னு விஜய்கிட்ட சொல்லிகிட்டே இருக்கிறாராம்..

ஏற்கனவே விஜய் மேடையில கட்சியோட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ்னு இருக்கிறவங்களையே பேசவிடாம தடுக்கிறார்னு ஜான் ஆரோக்கியசாமி மேல செம்ம கோபத்துல இருக்கிறாங்க.. இப்ப வெளியில இருக்கிற சில ‘தலை’களும் எவ்வளவு நாள்தான் வெயிட் பண்றதுன்னு சலிச்சு போய் வேற கட்சியில போய் இணைஞ்சுகிட்டும் இருக்காங்க..

அதுசரி.. என்னமோ விசில் சப்தம்னு சொன்னீரே?

சொல்வோம்யா.. ” நான் உங்க விஜய் வர்றேன்னு” சொல்ற விஜய் டயலாக்குக்கு சப்போர்ட்டா வரப்போகுதாம் தவெகவோட தேர்தல் சின்னம்..

விஜய் கட்சிக்கு ஆட்டோ, யானைதான் தேர்தல் சின்னம்னு பேசினாங்களே?

யானையை யாரும் சொல்லலையே.. “ஆட்டோ” பற்றிதான் ரொம்ப காலமாக விஜய் தமது சகாக்களுடன் தீவிரமாக ஆலோசிச்சுகிட்டு இருந்தாரு..

இதுபற்றி விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசிய போது, விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டுக்கு முன்னாடியே தேர்தல் ஆணையம் எங்க கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் சேர்தது.. அதாவது ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி’ன்னு தவெகவை தேர்தல் ஆணையம் லிஸ்ட் பண்ணியிருக்கு..

புதியதாக கட்சி தொடங்கி, எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை இந்த லிஸ்ட்டில் தேர்தல் ஆணையம் வைக்கும்..

இப்ப தவெகவும் இந்த லிஸ்ட்டில் இருக்கு..

எங்களுக்கு சுயேட்சைகளுக்கான சின்னங்களில் இருந்து நாங்க கேட்கிற ஒரு சின்னத்தை ஒதுக்குவாங்க.. அதே சின்னத்தை எல்லா தொகுதிக்கும் ஒதுக்க சொல்லி நாங்க கேட்போம்..

பொதுவாக, பார்லிமெண்ட் தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல்களில் மொத்த தொகுதிகளில் 5% இடங்களிலும் போட்டியிடும் போது எல்லா தொகுதிக்கும் ஒரே சின்னத்தை ஒரு அரசியல் கட்சி கேட்க முடியும்னு தேர்தல் ஆணைய விதி இருக்கு..

இதை பயன்படுத்திதான் எல்லா தொகுதிக்கும் ஒரே சின்னத்தை ‘பொது சின்னமாக தவெக கேட்கும்..

1971-ல் கோவையில விவசாயிகள் சங்கம், இரட்டை இலை சின்னதுல போட்டியிட்டுச்சு… ஆனால் போதுமான வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெறலை..

அடுத்த வருஷம், 1972-ல் அதே இரட்டை இலை சின்னம், திண்டுக்கல் பார்லிமென்ட் எலக்ஷனில் அதிமுகவுக்கு கிடைச்சுது.. அதுக்கு அப்புறம் தேர்தல்களில் தொடர்ந்து ஜெயிச்சு போதுமான வாக்கு சதவீதத்தை வாங்குனதால இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு நிரந்தரமாகிடுச்சு..

அதனாலதான் சின்னம் தேர்வு செய்யுறதுல விஜய் ரொம்ப தீவிரமாக கவனமா இருக்கிறாரு..

முதலில், பொது சின்னமாக ‘ஆட்டோ’வைத்தான் கேட்கலாம்னு விஜய் ஆலோசிச்சுகிட்டு இருந்தாரு.. அதுவே செய்திகளாக வலம் வந்துகிட்டு இருந்துச்சு.. அதுக்கு அப்புறம்தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சின்னத்தை கேட்கலாம்னு முடிவை மாற்றினார்” என்கின்றனர்.

சரி.. இப்ப ‘ஆட்டோ’வுக்கு பதில் என்ன சின்னம் கேட்க போறாராம் விஜய்?

சொல்வோம்யா.. விஜய், இப்ப ‘விசில்’ சின்னம் கிடைச்சா எப்படி இருக்கும்? எப்படி ரீச் இருக்கும்? மக்கள் கிட்ட ஈசியாக கொண்டு போய் சேர்க்க முடியுமா? என்றெல்லாம் ரொம்பவே சீரியசாகவே கேட்டுகிட்டு இருக்கிறாராம்.. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சகாக்களிடம் மட்டுமல்ல.. தமக்கு நெருக்கமான நண்பர்களிடமும் கூட விசில் சின்னம் எப்படி இருக்கும் என சீரியசாக கேட்கிறாராம்..

அவங்களும் ரொம்பவே நல்லா ரீச் ஆகும்,, பஞ்ச் டயலாக்குடன் விசில் அடிச்சா தூள் பறக்கும் என உற்சாகப்படுத்த விஜய்க்கு ரொம்ப மகிழ்ச்சியாம்..

இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜூனா, “விசில் சின்னம்தானே, டெல்லியில எலக்‌ஷன் கமிஷனில் நமக்கு ஆட்கள் இருக்காங்களே.. ஈசியாகவே வாங்கிடலாம்”னு விஜய்க்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்திருக்காராம்..

அப்ப தெருவுக்கு தெருவுக்கு விசில் சப்தம் காதைப் பதம் பார்க்கும்னு சொல்றது உண்மையாகிடுமோ?

அப்படி கிடைச்சா ‘காதுகள் ஜாக்கிரதை’தான் நிலைமை வரும்..

விஜய்க்கு இன்னொரு குஷியான செய்தி கொடுத்திருக்கிறார் வைகோ.. நாகையில் ஈழத் தமிழர் பிரச்சனையை சில செகண்ட்தான் விஜய் பேசியிருந்தார்.. அந்த பேச்சுக்கே, வைகோ ரொம்பவே நெகிழ்ந்து போய், “ஈழத் தமிழர் நலனுக்காக யார் குரல் கொடுத்தாலும் ‘அதை’ மனதார மெச்சி வரவேற்கிறேன்” என பிரஸ் மீட்டில் சொல்ல.. ‘இந்த வாய்ஸ் புதுசா இருக்கே’ என திகைப்புடன் பார்க்கிறாராம் விஜய் என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

Digital Thinnai: கழட்டி விடும் ஜான்... EC-க்கு போகும் ஆதவ்... | Vijay | Aadhav Arjuna | MKStalin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share