ADVERTISEMENT

தவெக சிறப்பு பொதுக்குழு : விஜய் அழைப்பு!

Published On:

| By Kavi

வரும் நவம்பர் 5ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெகவின் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு தவெக எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. விஜய் பிரச்சாரம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி சென்னை அழைத்து வந்து பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்.

ADVERTISEMENT

அதில், ”நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது.

இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்’ என்று கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share