ADVERTISEMENT

கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு : தவெக ரியாக்சன்!

Published On:

| By christopher

tvk reaction on againt the party petition in hc

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 17) தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மீது அதிக நெருக்கடிகள் குவிந்து வருகிறது. சிபிஐ விசாரணை ஒரு பக்கம் என்றால், மற்ற கட்சிகளின் கூட்டணி தொடர்பான பேச்சுகள் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.

விஜய் மற்றும் த.வெ.க.வினரின் அஜாக்கிரதையாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு, உயிர்பலி நேர்ந்துள்ளது. எனவே இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இந்த விதிகளை மீறிய தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினர் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி இழப்பீடு வழங்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது” என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கூடிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தரப்பில் இந்த வழக்கு குறித்து கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

மனுவின் நோக்கமே தவறு!

அதில், “தவெக பதிவு செய்யப்பட்ட கட்சி. தேர்தலை சந்தித்தால் மட்டுமே அங்கீகாரத்தை பெற முடியும். அங்கீகாரத்தை பெற, 234 தொகுதியில் போட்டியிட்டு 8% வாக்குகள் வாங்க வேண்டும் அல்லது 234 தொகுதியில் எட்டு இடங்களில் வெல்ல வேண்டும்.

    இந்த மாதிரி 4 நிபந்தனைகள் உள்ளது. அந்த 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும்.

    தவெக இதுவரை ஒரு தேர்தலில் போட்டி போடாத போது எப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். பதிவு செய்யப்பட்ட கட்சியாக பயணிக்கிறது.

    பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்த நாதக, விசிக 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் மேற்கண்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறினார்கள். என இந்த மனுவின் நோக்கமே தவறு. அங்கீகாரத்தை பெறாத ஒரு கட்சியின் அங்கீகாரத்தை எப்படி ரத்து செய்ய முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share