தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுவில் கட்சியின் பொருளாளரான வெங்கட்ராமன் இடம் பெறாதது அக்கட்சியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று (அக்டோபர் 28), 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அறிவித்தார்.
இந்த நிர்வாகக் குழுவில் தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் ராஜ்மோகன், விஜயலட்சுமி, ராஜசேகர், அருள்பிரகாசரம் என அனைத்து தலைமை கழக நிர்வாகிகள் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மா.செ. சிவக்குமார், கரூர் மதியழகன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். தவெக உறுப்பினராக மட்டுமே உள்ள பாலசுப்பிரமணியன் மற்றும் மரிய வில்சன் ஆகியோருக்கும் நிர்வாகக் குழுவில் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் தவெகவின் தலைமை கழக முக்கிய பதவியான பொருளாளரான வெங்கட்ராமனுக்கு, நிர்வாகக் குழுவில் விஜய் இடம் தராமல் ஒதுக்கி வைத்திருப்பது ஏன்? என தவெகவில் புதிய குழப்பம் எழுந்துள்ளது.
தவெகவின் பொருளாளராக மட்டுமல்லாமல் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்னர் இருந்தே அவரது அனைத்து சொத்து விவரங்கள், வரவு செலவு கணக்கு விவரங்களை கையாண்டு வருகிறவர்தான் வெங்கட்ராமன்.
மாமல்லபுரத்தில் விஜய், நேற்று கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வெங்கட்ராமன் சற்று தாமதமாக சென்றார்; அவரை பவுன்சர்கள் உள்ளே விட மறுத்தனர்; இதனால் இடைவிடாமல் ஹாரன் அடித்தபடியே வெங்கட்ராமன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் பேசி பின்னர் அனுமதி பெற்றார்.
அப்போது கூட, “கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கான பண விவகாரமாக வங்கிக்கு சென்றுவிட்டு திரும்ப தாமதமாகிவிட்டது; விஜய்யும் கூட நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்பதற்காக இனி யாரையும் அனுமதிக்க வேண்டாம் என சொல்லி இருந்தார்; நான் தாமதமாக வருவேன் என புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி இருந்தேன்; அவர் பவுன்சர்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டார்; மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை” பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்தார் வெங்கட்ராமன்.
இப்படி விஜய்க்கு மிகவும் நம்பிக்கையான வலதுகரமான, கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமனை திடீரென ஒரே நாளில் ஓரம்கட்டும் வகையில் நிர்வாக குழுவில் இடம் தர மறுத்திருப்பதன் பின்னணிதான் புரியவில்லை என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
