ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு?

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே..

ADVERTISEMENT

நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா..

எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்?

ADVERTISEMENT

எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு..

தவெகவில் அப்படி யார் யாருக்கு இடையே சண்டை.. விளக்கமாக சொல்லுமய்யா..

ADVERTISEMENT

தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார்னு 2-ம் கட்ட தலைகள் இருக்கிறாங்க.. இவங்கதான் கட்சி..

இவங்க எல்லோருக்கும் மேல ‘ஜான் ஆரோக்கியசாமி’ இருக்கிறாரு.. இவருக்கும் கட்சிக்குமே தொடர்பு இல்லை.. விஜய்-க்கு தேர்தல் வியூக வகுப்பாளர் அல்லது ஆலோசகர்.

சரி.. இதுல யார் யாருக்கு இடையே போட்டி.. முட்டல் மோதல்?

அப்படி எல்லாம் ஒன்லைனில் சொல்லிவிடவா முடியும்? புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் மோதல் இருக்கு; புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருக்குமே கட்சிக்கே தொடர்பே இல்லாத, ஆனால் கட்சியை கண்ட்ரோல் செய்கிற ஜான் ஆரோக்கியசாமி மேல ‘காண்டு’ இருக்கு.. புஸ்ஸி, ஜான், ஆதவ், ஜான், நிர்மல்னு அத்தனை பேர் மீதும் அருண்ராஜூக்கு ஆத்திரம் இருக்கு.. “என்ன பெரிய 2-ம் கட்ட ‘தலைகள்’.. அவங்களுக்கும் மேல நான்னு” எல்லா கட்சி நிர்வாகிகளையும் நினைக்கிறாராம் ஜான்..

யோவ்.. என்னய்யா தலையே சுத்துது..

இதுக்கே இப்படின்னா.. இப்ப சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கே getoutbussy anand-ங்கிற மாதிரியான ஹேஷ்டேக்குகள்.. புஸ்ஸி ஆனந்தால்தான் தவெக கட்சியே நாசமா போச்சு.. கரூர் சம்பவமே நடந்துச்சு.. கரூருக்கு பிறகு ஓடிப் போய் புஸ்ஸி பதுங்கிட்டதால கட்சியே முடங்கிப் போச்சு.. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றனும்னு அந்த ஹேஷ்டேக்கில் கொட்டித் தீர்க்கிறாங்க.

அந்த ஹேஷ்டேக்கில் வேற என்ன சொல்றாங்க?

தவெகன்னு ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பே இல்லை.. பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர்களை மட்டும் நியமிச்சா போதுமா? அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு எப்ப பொறுப்பாளர்களை நியமிப்பாங்க? அப்படி எல்லாம் நியமிக்காமலேயே ஆட்சியை பிடிப்போம்னு அலப்பறை விடுறது நல்லாவா இருக்கு?ன்னு ஓபனாகவே விமர்சிக்கிறாங்கப்பா

சரிய்யா.. இது எல்லாம் விஜய்க்கு தெரியுமா? அவரு என்ன சொல்றாரு?

இந்த அக்கப்போர் பற்றி விஜய் கவனத்துக்கு போனதா? இல்லையான்னு? அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசினோம்.. அந்த சோர்ஸ்களோ மூச்சுவிடாமல் அத்தனையையும் நம்மிடம் கொட்டிட்டாங்க..

என்னப்பா சொன்னாங்க..

நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “எங்க சார் (விஜய்) பொதுவாக எதையும் தேடிப் பார்த்து தெரிஞ்சுக்கமாட்டாரு.. அவருக்கு பட்டினப்பாக்கம் ஆபீசு, பனையூர் ஆபீசு – வீடு இதுக்கு மட்டும் போகத் தெரியும்.. நீங்க சொல்ற சோசியல் மீடியா சண்டை, வெட்டு குத்து எல்லாம் சாருக்கு எதுவுமே தெரியாது.. இதை எல்லாம் தேடிப் படிக்கிறவரும் இல்லை.. இதுதான் எங்க சாரோட கேரக்டர்” என அதிர்ச்சியை தந்தபடியே அடுத்த மேட்டருக்கு தாவினார்.

“எங்க சாரைப் பொறுத்தவரைக்கும் அவரும் யாரையும் அதிகமாக தொடர்பு கொள்ளமாட்டார்; யாரும் அவரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது.. இரவு 9 மணிக்கு மேல தன்னோட ரூமுக்கு போனா காலையில அவரா எழுந்து வெளியே வரும் வரைக்கும் வெயிட் செஞ்சுதான் ஆகனும்.. அவரா ரொம்ப சில பேர்கிட்ட மட்டுமே போனில் பேசுவார்.. அவங்க அப்பா கூட நேரடியாக சார் கிட்ட பேசமாட்டாரு.. சாரோட உதவியாளர் மூலமாகத்தான் பேசுவாரு” என்று அடுத்த ஷாக் கொடுத்தார் அந்த நண்பர்.

அத்துடன், “புஸ்ஸி ஆனந்த்- ஆதவ்- ஜான் இவங்களுக்கு இடையே மோதல் இருக்குன்னு மதுரை மாநாடு நடந்தப்பவே லேசாக புரிஞ்சுகிட்டாரு சார்.. அதனாலதான் மாநாடு முடியட்டும் பேசிக்கலாம்னு சொல்லி இருந்தாரு.. மாநாடு முடிஞ்சதும் இவங்க அக்கப்போருக்கு பஞ்சாயத்துன்னு பெருசா சார் நடத்தலை… எல்லாம் சரியாகிடும்னு சார் நினைச்சாரு.. எங்க சாரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்கு யூஸ் செய்யனும் நினைக்கிறாரு..

கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரைக்கும் ஜான் சொன்னதாலதான் கரூரில் இருந்து கிளம்பினாரு.. ஜான் சொன்னதாலதான் கருருக்கு திரும்பவும் போகலை.. ஜான் சொல்றதைத்தான் சாரும் கேட்பாரு” என ஜான் ஆரோக்கியசாமி விவகாரத்துக்கு வந்தார் அந்த நண்பர்.

தவெக உட்கட்சி மோதல் பற்றி விஜய்க்கு நெருக்கமான அந்த நண்பர் நம்மிடம் கூறும் போது, “கட்சியில எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறாரே”ன்னு ஜான் ஆரோக்கியசாமி மேல புஸ்ஸி ஆனந்துக்கு ரொம்பவே கோபம்.. ஜான் சொல்றபடி எங்க சார் நடந்துக்கிறாரு.. ஆனா அது அத்தனையும் திமுகவுக்கு சாதகமாக போகுதுன்னு புஸ்ஸி சந்தேகப்படுறாரு.. அதாவது ஜான் ஆரோக்கியசாமி திமுகவோட ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோன்னு புஸ்ஸிக்கு செம்ம டவுட்.. இதை ஓபனாக கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி சொல்ல இது ஜான் காதுக்கும் போனது..

அப்ப புஸ்ஸிக்கும் ஜானுக்கும் இடையே பயங்கர சண்டையாகிடுச்சு.. “கரூரில் இருந்து தளபதியை நீங்கதானே ரிட்டர்ன் வர சொன்னது”ன்னு புஸ்ஸி பாய, ஜான் ஆரோக்கியசாமியோ, “இத்தனை நாளாக பயந்தா கொள்ளி மாதிரி ஓடிப் போய் பதுங்கிட்டு இப்ப வந்து பேசுறாரு பாரு.. தளபதி வந்தாருன்னா நீங்க கரூருக்கு ரிட்டர்ன் போயிருக்க வேண்டியதுதானே.. அப்படி போயிருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா?”ன்னு திருப்பி ஜான் பாய ஒரே ரணகளமாகிடுச்சு..

புஸ்ஸியை பொறுத்தவரைக்கும், தன்னை குறிவைக்கிறது, காலி செய்யுறது எல்லாமே ஜான் ஆரோக்கியசாமியோட வேலைதான்னு சொல்றார்.. என்னதான் தான் கட்சி பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியிலேயே இல்லாத ஜான் சொல்றதைத்தானே விஜய் கேட்கிறாரேங்கிற கோபம் புஸ்ஸிக்கு ரொம்பவே இருக்கு” என்றார்.

சரி ஆதவ் அர்ஜூனா என்ன சொல்றாருன்னு கேட்டீங்களா?

ஆமாய்யா.. “ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரைக்கும் ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்… எதுக்குடா இவ்வளவு கோடி கோடியா செலவு செய்றோம்னு ரொம்பவே விரக்தியாகிட்டார்.. இப்ப கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சேன்னும் சொல்றார்.. இவ்வளவு செலவு செய்யுற நாம, சார்கிட்ட நேரடியாக நினைச்ச நேரத்துல பேச முடியறதுல்லை.. எல்லாத்துக்கும் ஜான் மூலமாகவே போகனும்னா என்ன அர்த்தம்? இது எல்லாம் எத்தனை காலத்துக்கு சரிப்படும்? என சலித்து கொள்கிறார்..

அருண்ராஜைப் பொறுத்தவரைக்கும் புஸ்ஸி, ஜான், ஆதவ் மூன்று பேருமே சாரை தவறாக வழிநடத்துறாங்க.. இதைப்பற்றி ஒரு சில டைம் தளபதிகிட்ட தனிப்பட்ட முறையில் தாம் சொன்னதாகவும் அப்படி சொன்ன விஷயங்களை கூட இந்த மூன்று பேரிடமும் சார் ஷேர் செஞ்சுட்டாருன்னும் ரொம்பவே ஆதங்கப்படுகிறார்” என்றார் விஜய்யின் நண்பர்.

அதே மாதிரி, “தவெகன்னு கட்சியை உருவாக்குனதே நான்தானே.. ஜான், ஆதவ் எல்லாம் இன்னைக்கு வந்தவங்க.. நான் இல்லாம கட்சி நடத்த முடியாதுன்னு இவங்களுக்கு தெரியாதா?” எனவும் புஸ்ஸி சீறுகிறார் என்றார் விஜய்க்கு நெருக்கமான நண்பர்.

தவெகவின் நிர்வாகிகள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசிய போது, “எதுக்குதான் ஜான் ஆரோக்கியசாமி பேச்சை மட்டும் தளபதி மலை போல நம்புறாருன்னு தெரியலை.. இன்னைக்கு கட்சியோட மா.செ.க்கள் யார்னு கூட தளபதியால முழுசா சொல்ல முடியாது.. புஸ்ஸிதானே எல்லாம் பார்க்கிறாரு.. அவருக்கு எதிராக அவரை அசிங்கப்படுத்தி ஆனந்தப்படுறாரு ஜான்.. இதை தளபதி கண்டுக்காம இருக்கிறாரே” என ஆதங்கப்படுகின்றனர்.

தவெகவின் உட்கட்சி மோதல், விஜய்யின் ‘தனிமை’ போக்கு.. இதெல்லாம் தமிழக அரசியலுக்கு எவ்வளவு காலத்துக்கும் தாங்கும்? என நமக்கும் சில கேள்விகள் இருந்தாலும், “ஜெயலலிதா- கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் இருக்குன்னு ரஜினி சொன்னாரு இல்லையா… அந்த வெற்றிடம் இன்னும் இருக்குன்னு விஜய் நம்புறாரு.. இப்படித்தான் அரசியல் செய்யனும்னு இருந்த சகாப்தாம் எல்லாம் முடிஞ்சு போச்சு.. யாரும் எப்படியும் எதுவும் தெரியாமலேயே அரசியல் செய்ய முடியும் என்பதுதான் தமிழக அரசியலோட தற்போதைய நிலவரம்.. அதுல விஜய்யும் அறுவடை செய்ய நினைக்கிறாரு” என விஜய்யை ஆதரிக்கக் கூடிய சில அரசியல் தலைவர்கள் சொல்வதாக
டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share