மதுரை பாரபத்தில் தவெகவின் இரண்டாவது மாநாடு நடைபெறவிருப்பதால், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நாளை (ஆகஸ்ட் 21) மதுரை மாவட்டம் பாரபத்தியில் தவெகவின் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் மதுரை சென்றுவிட்டனர்.
சுமார் 10 லட்சம் பேர் மாநாட்டில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தவெகவினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில், பாரபத்தியை சுற்றியுள்ள எலியார்பத்தி, வளையாங்குளம், காரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் நாளை கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்படக் கூடும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதேசமயம் மாநாடு நடைபெறும் சுற்றுவட்டார பகுதிகளான கூடக் கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பைக்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வலையங்குளம் டோல்கேட், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு, சிவரக்கோட்டை, திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் அடைக்கப்படும் என மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
இந்தசூழலில் மாநாடு நடைபெறும் பகுதியில் சிறு சிறு கடைகள் முளைத்துள்ளன. விக்கிரவாண்டி மாநாட்டின் போது போதிய தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்த செய்திகள் பரவிய நிலையில், மதுரையில் கடைகளும் வந்துள்ளன. அந்த கடைகள் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் கடைகள் அகற்றப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.