கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்தமாக அக்கட்சியின் தலைவர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கரூரில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவோ, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு தவெக தலைவர் கூட எட்டிப் பார்க்கவும் இல்லை.
விஜய் பிரசார கூட்டம் முடிவடைந்த நிலையிலேயே கடுமையான நெரிசல் ஏற்பட்டு அடுத்தடுத்து மரண ஓலங்கள் அலற வைத்தன. கரூர் மாநகரம் முழுவதும் உடல்களை சுமந்தபடி ஆம்புலன்ஸ்கள் சீறிட்டன.
கரூர் பெருந்துயர பலி எண்ணிக்கை 2-ல் தொடங்கி 10, 13 என்பது விடிய விடிய 39 ஆக உயர்ந்தது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் கொடுந்துயர செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் களமிறங்கியது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 7 அமைச்சர்கள் கரூர் வந்து சென்றுவிட்டனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் துயர கதறல் கேட்கும் கரூருக்கு வந்து ஆறுதல் சொல்கின்றனர்.
ஆனால் இத்தனை பெருந்துயரத்துக்கும் காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், இரவோடு இரவாக தனி விமானம் மூலம் சென்னைக்கு பறந்து ஓடிவிட்டார். விஜய்யுடன் வலதும் இடதுமாக உலா வரும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல் குமார் உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் இருக்கிற இடமும் தெரியவில்லை. விஜய்க்கு தாமே எல்லாமும் என ஆலோசனை வழங்குகிற ஜான் ஆரோக்கியசாமி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாராம்.
அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் விழிபிதுங்கி போயிருக்கின்றனர் விஜய்யும் அவரது கட்சி நிர்வாகிகளும். முதல் கட்டமாக விஜய்யின் அடுத்த வார வேலூர், ராணிப்பேட்டை பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தனை துயரத்துக்குப் பின்னரும் இனி விஜய் பிரசாரம் செய்ய வெளியே வருவாரா? அவரது பிரசார கூட்டங்களுக்கு இனி அனுமதி கிடைக்குமா? என்னதான் நீதிமன்ற படிகளேறினாலும் 39 பேர் மரணத்துக்கு என்ன பதில் சொல்லி சமன் செய்வார் விஜய்? என்கிற ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.
அத்துடன் கரூரில் தங்கி பாதிக்கப்பட்டவர்களை- தம்மை பார்க்க வந்து உயிரிழந்தவர்களை- தம்மை போற்றி கொண்டாடிய உயிர்களை இழந்த உறவுகளை சந்திக்காமல் சென்னை போன விஜய்யின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த விமர்சன அனலைத் தணிக்கும் வகையில் தற்போது தலா ரூ.20 லட்சம் இழப்பீடு என அறிவித்திருக்கிறார் விஜய்.
இன்னொரு பக்கம், சட்டம் தன் கடமையைச் செய்யும் வகையில் கரூர் மாவட்ட தவெக தலைவர் மதியழகன், தவெக தலைமவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. திட்டமிடாத கொலை முயற்சி வழக்கு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டதால் தவெகவின் இந்த நிர்வாகிகள் மட்டுமல்ல பலரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
இப்படி என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் தனித்துவிடப்பட்டுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு நிர்வாகி கூட கரூர் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
விஜய் தரப்பிலும் கூட, கரூருக்கு போகலாமா? இல்லையா? என்கிற ஆலோசனைகள் நடக்கலாம்; ஆனால் ஆலோசனைகள் அனைத்தும் அப்படி செய்தால் ‘என்ன எதிர்வினை’? ‘என்ன பதில் கிடைக்கும்? என விடை தெரியாத கேள்விகளாகத்தான் இருக்கின்றன என்கின்ற தவெக வட்டாரங்கள்.