உங்களுக்காக நீதி கேட்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்று நான் உங்களிடம் நீதி கேட்பதற்காக வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தான் என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், இன்று (பிப்ரவரி 13) சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், “Courage தான் எல்லாவற்றிற்கும் ஒரு Base. courage எல்லாவற்றிற்குமே ஒரு Power. அப்படிப்பட்ட அந்த பவர் எனக்கு எதிலிருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியுமா? நம்மை ஒரு ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நாம் யார் என்று ப்ஃரூப் (proof) செய்து காட்ட வேண்டும் என்று தோன்றும். நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்ற உத்வேகம் ஒன்று வரும்.
எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறார்களோ, அதே விஷயத்தை வைத்து நாம் ஒரு பாசிட்டிவாக மாற்றுவது என்பதில் இருந்துதான் பவர் ஸ்டார்ட் ஆகும். அப்படிப்பட்ட உண்மையான அந்த பவரை சொல்லும் அந்த பாயிண்ட்டிலிருந்து ஆரம்பிக்கலாமா? “ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா”, “ஏ விஜய் பனையூரை விட்டு வெளியே வா” என்று சொல்பவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? முதலில் என் வீடு எங்கு இருக்கிறது என்றாவது தெரியுமா? என்னை சீண்டிப் பார்ப்பதாக நினைத்து கிண்டலும் கேலியுமாகப் பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன்.
இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு ஸ்டேட் ஆக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, என் தாய் நாடான தமிழ்நாடு தான் என் வீடு. என் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா? மொத்தமாக எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். மொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள், என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த எட்டு கோடி சொந்தங்களுக்கும் இனிமேல் எல்லாமுமாக கூட இருக்கப் போவது இந்த விஜய் மட்டும் தான்.
தமிழ்நாட்டின் முதல் படை வீரனாக, தமிழ்நாட்டின் முதல் பாதுகாவலனாக அவர்களுடன் கூடவே நிற்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். இன்று உங்கள் விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டுமல்ல, நீதி கேட்டும் வந்துள்ளேன்.
உங்களுக்காக நீதி கேட்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்று நான் உங்களிடம் நீதி கேட்பதற்காக வந்துள்ளேன். இந்த விஜய் என்ன தப்பு செய்தான்? தன்னை நேசித்த, தன்னை விரும்பிய மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது ஒரு தவறா? எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மக்களுக்காக மட்டுமே வந்தான். அது ஒரு தவறா?
மற்ற கட்சிகளுக்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பெர்மிஷன் கொடுப்பார்கள், இடம் கொடுப்பார்கள். ஆனால் நமக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டார்கள், கொடுக்கவும் விடமாட்டார்கள். இது என்ன நியாயம்?
நான் போய் மக்களை சந்திப்பதற்கோ, மக்கள் வந்து என்னை சந்திப்பதற்கோ ஒரு உரிய இடமோ,பாதுகாப்போ மற்ற கட்சிகளுக்கு கொடுப்பவர்கள் எனக்கு கொடுக்க மாட்டார்கள். இது என்னங்க நியாயம்?
மற்றவர்களுக்கு எல்லாம் SOP என்பது Standard Operating Procedure. ஆனால் எனக்கு மட்டும் அது Stalin Sir Operating Procedure. இது என்ன நியாயம்? இந்த விஜய் உண்மையானவன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நமக்கு எதிராக சூழ்ச்சி செய்வது யார், பழி போடுவது யார், யாரெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இதைச் செய்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் என் சொந்தங்களான உங்களிடம் நீதி கேட்காமல் யாரிடம் போய் கேட்பேன்” என்றார்.
