தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று (அக்டோபர் 4) டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தமிழக வெற்றி கழகத்தை நோக்கி அடுக்கடுக்காக காட்டமான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது தவெக தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் ட்விட்டர் பதிவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. அவர், ”ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவதுபோல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதற்கிடையே கரூர் சம்பவத்தை அடுத்து ஆதவ் அர்ஜுனா ஏற்கெனவே டெல்லி சென்று சட்ட வல்லுனர்களை சந்தித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் உத்தரகாண்டில் தொடங்கும் தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்கு ஆதவ் அர்ஜுனா இன்று வருகை தந்தார்.
அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக ஏஎன்ஐ ஊடக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். விரைவில் உண்மை வெளிவரும்” என தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.