டிஜிட்டல் திண்ணை: விஜய் டிக்டேட் செய்த தீர்மானம்- ‘ஷாக்’ கொடுத்த டிடிவி தினகரன்!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “தனித்துதான்.. தனித்தேதான்..” என ரிப்பீட்டாக சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா பரபரப்பா இருக்கிறீர்?

ADVERTISEMENT

விஜய்யின் தவெக பொதுக்குழு விவகாரங்கள்தான்.. கூட்டணி பற்றிதான் தெள்ள தெளிவாக தீர்மானமாக சொல்லிட்டாரே விஜய்….

தீர்மானத்துல என்ன சொல்லி இருக்கிறாங்க?

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் இன்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 12-ஆவதாக கடைசித் தீர்மானம்தான் கூட்டணி பற்றியது. அதில், “தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது” என தெளிவாக சொல்லி இருக்காங்க.

இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களும் பரபரப்பும் இருக்கே…

ADVERTISEMENT

ரொம்ப பிபி ஏறிடுச்சா?

ஆமாய்யா.. “பாஜக- அதிமுக கூட்டணியில விஜய் சேரப்போறாருன்னு தீர்மானம் வரப் போகுதாம்.. அதுவும் விஜய் கட்சிக்கு தொகுதி எல்லாம் கூட பேசி முடிவாகிடுச்சாம்..” என்றெல்லாம் நேற்று இரவு முதலே அரசியல் வட்டாரங்களில் ரொம்பவே அனலடிச்சது.. திமுக தரப்பும் கூட, “இப்படி ஒரு தகவல் உண்மையா? விஜய் பொதுக் குழுவுல இப்படி ஒரு தீர்மானம் வரப் போகுதா?” என்றெல்லாம் டென்ஷன் குறையாமல் டென்ஷனாக்கிக் கொண்டே இருந்தது.. இத்தனை பரபரப்புகளுக்கும் தீர்மானம் மூலமாக முற்றுப்புள்ளி வைச்சுட்டாரு விஜய்..

இப்படி ஒரு தெளிவான முடிவை அறிவிக்கிறதுக்கு முன்னாடி தீவிரமான ஆலோசனை நடந்திருக்குமே?

ஆமாய்யா.. இதுபற்றி தவெக வட்டாரங்களில் விசாரித்த போது, “பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிற அத்தனை தீர்மானங்களையும் தளபதி முழுமையாக படிச்சு பார்த்தாரு.. அப்புறம் கடைசியாக கூட்டணி பற்றிய தீர்மானத்தை அவரேதான் டிக்டேட் செஞ்சாரு. தளபதி இந்த தீர்மானத்தை வாசிக்கிறப்ப கூட ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜு எல்லாம் ஒருவித தயக்கத்துடன்தான் இருந்தாங்க” என்றனர்.

அத்துடன், “நாம அமித்ஷா பேச முயற்சி செஞ்சப்பயும் பதில் கொடுக்கலை.. எடப்பாடி தரப்புல பேச வந்தப்பயும் பிடி கொடுக்கலை.. நம்மளை முதல்வர் வேட்பாளராக ஏத்துகிட்டு நம்ம தலைமையில் கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவங்ககிட்ட நாம பேசுவோம்” என்றும் தயக்கம்காட்டிய ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜூக்கு பதிலும் தந்தாராம் விஜய்.

ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜூனுக்கு அப்படி என்ன தயக்கமாம்?

அவங்கதான் விஜய்க்கு தெரியாமலேயே கூட்டணி பற்றி அதிமுக தரப்புல பேசுறாங்கன்னு நாம ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் சொல்லி வருகிறோமே..

அதே மாதிரி டிடிவி தினகரனையும் அருண்ராஜ் சமீபத்துல சந்திச்சு பேசியிருக்கிறாரு.. இதுபற்றி தவெக சோர்ஸ்கள் நம்மிடம் பேசிய போது, “அருண்ராஜிடம், நீங்க விஜய் சொல்லித்தானே வந்து பேசுறீங்கன்னு? டிடிவி கேட்டிருக்காரு.. அதுக்கு, ‘இல்லை.. நான் வந்தது விஜய்க்கு தெரியாது’ன்னு அருண்ராஜூ பதில் சொல்ல தினகரன் அப்செட் ஆகிட்டாராம்..

அப்போது, “ஏங்க நான் ஒரு கட்சியோட தலைவர்.. கடந்த தேர்தலில் என் தலைமையில ஒரு தனி கூட்டணியே அமைத்திருந்தோம்.. அதனால நானும் உங்க தலைவரும் (விஜய்) நேரடியாக ஒன் டூ ஒன் சந்தித்து கூட்டணி பற்றி பேசுறதுதான் சரியா வரும்.. நான் உங்ககிட்ட சொல்றதை 100% அப்படியே விஜய்கிட்ட நீங்க சொல்வீங்கன்னு எப்படி சொல்ல முடியும்? அதனால விஜய்யை நேரடியாக சந்திச்சுதான் பேசனும்.. அவரை சந்திக்க நான் ரெடியாக இருக்கேன்.. பொது இடமாக இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும் விஜய்யை நேருக்கு நேராக சந்தித்து பேச ரெடியா இருக்கிறேன்”ன்னு கறாரா சொல்லி இருக்கிறார்..

இதுக்கு பிறகு விஜய்கிட்ட அருண்ராஜ் இந்த சந்திப்பு பற்றி சொன்னாரு.. ஆனால் விஜய்யோ, அருண்ராஜை ஒரு சீரியஸ் ‘லுக்’விட்டுட்டு அமைதியாகிட்டாரு..” என்றனர்

அதுக்கு பிறகுதான், தமது தலைமையை – தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்கிற கட்சிகளுடன் கூட்டணிங்கிற இறுதி முடிவை எடுத்து தீர்மானமாக டிக்டேட் செஞ்சிருக்காரு விஜய்..

தவெக பொதுக்குழுவில் விஜய் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு, “நம்மை ஏத்துகிட்டு வருகிறவங்களோடு கூட்டணி பற்றி பேசுவோம்னு” சொல்லிட்டதால கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளுக்கு ‘வலையை’ பலமாக வீசி கொண்டிருக்கின்றனர் தவெக 2-ம் கட்ட ‘தலைகள்’.. சிக்கப் போவது எந்த கட்சிகளோ? என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share