அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி பறந்தது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம் ‘ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 8) இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியின் பாஜகவினரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியையும் சிலர் ஏந்தி நின்றனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘அதிமுக கூட்டணி வலுவான கூட்டணி. அங்கே பாருங்கள் கொடி பறக்கிறது. பிள்ளையார் சுழி போட்டாச்சு.
திமுகவினர் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதிமுக அமைக்கும் கூட்டணி தான் வலுவான கூட்டணியாக இருக்கும்.
எழுச்சி ஆரவாரம்… ஸ்டாலின் அவர்களே குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவிகளை துளைக்கும்.
அவர் கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவு கானல் நீராக போய்விடும் ‘ என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பஸ்ஸில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது அவரது பேச்சை கேட்டு கீழே நின்றிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
கரூரில் நடந்த பெருந்துயரம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவாகவும் பேசிய எடப்பாடி பழனிசாமி, கரூரில் திட்டமிட்டு சதி நடந்து இருக்கிறது. நாங்கள் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம். கரூரில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருக்கும் போது காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். உண்மை தெரிய வேண்டுமென்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போதும் தவெக தொண்டர்கள் சிலர் தங்கள் கட்சிக் கொடியை ஏந்தி வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.