அரூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் அதிமுக, பாஜக கொடிகள் பறந்த நிலையில் தவெக கொடியுடன் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று (அக்டோபர் 3) உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆங்காங்கே ஏராளமான விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர். இதில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விஜய்யின் தவெக கொடியை அசைத்த படி அவரது ரசிகர்கள் பங்கேற்றனர்.
ஏற்கனவே கரூர் சம்பவத்தில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஹேமமாலினி தலைமையிலான 8 எம்பிக்கள் அடங்கிய குழுவினர் கரூருக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி உள்ளது. ஆய்வில் ஈடுபட்ட ஹேமமாலினி செய்தியாளர்களை சந்தித்து பேசியவுடன் சற்று நேரத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். வீடியோவில் பேசிய விஜய் மற்ற இடங்களில் நடந்த பரப்புரையில் நடக்காத இது போன்ற சம்பவம் கரூரில் மட்டும் ஏன் நடந்தது என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் வீடியோ வெளிட்டதை தொடர்ந்து அவரை பாஜக இயக்குவதாக அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தவெக கொடியுடன் கலந்து கொண்டது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கரூர் துயர சம்பவத்திற்கு ஆளும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.