நடிகர் விஜய் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் போல் இருந்தது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஞ்சித் மீது தவெக-வினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கோவை துடியலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கரைப்பு விழாவை ஒட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்குப் பிரச்சனை. சாமி கும்பிடுவதற்குப் பிரச்சனை என்ற நிலை உள்ளது. இந்திய கலாச்சாரப்படி இருப்பதால் என்னை சங்கி என்று விமர்சித்தால் நான் ஒரு சங்கிதான்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய விஜய் பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து சொன்னாரா? அல்லது ஜெயலலிதாவைச் சொன்னாரா? கேப்டன் விஜயகாந்த்தைச் சொன்னாரா? ஒரு வேளை நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை. பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவர்கள் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவர் நடிகர் கமலஹாசன் தான் என்றார்.
மாநாட்டில் பிரதமரைச் சொடக்கு போட்டுக் குறிப்பிட்டுப் பேசிய விஜய் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காகப் பூனைக்குட்டியைப் போன்று கைக்கட்டி அமர்ந்திருந்தார். எதற்காக கச்சதீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சனை குறித்து பேசவா? அல்லது கல்வி சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா எதுவும் இல்லை தனது தலைவா படத்தை ரிலீஸ் செய்ய காத்திருந்தார்.
முதலமைச்சரை அங்கிள் என்றும் பிரதமரை மோடி என்றும் விஜய் குறிப்பிட்டு பேசினார் இதுதான் அரசியல் நாகரீகமா எனக்கு வரும் கோபத்தில் அவர் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என்பது போல் தோன்றுகிறது” என்று நடிகர் ரஞ்சித் பேசியது சர்ச்சையானது.
அவரது பேச்சு தவெகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ரஞ்சித் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி தமிழக வெற்றி கழகத்தினர் ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.