கூட்டணி பேரத்துக்காக எங்கள் கட்சியை பயன்படுத்துவதா? தவெக கண்டனம்

Published On:

| By Mathi

Vijay

“அரசியல் கட்சிகள் கூட்டணி பேரங்களுக்காக தங்களது கட்சிப் பெயரை பயன்படுத்துவதாக” தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தமது எக்ஸ் பக்கத்தில் நேற்று பிப்ரவரி 7-ந் தேதி பதிவிட்டுள்ளதாவது: மீண்டும் தெளிவாக்குகிறோம். எத்தனை முறை திருப்பி திருப்பி சொன்னாலும் பொய் ஒருபோதும் உண்மை ஆகாது. தமிழக வெற்றிக் கழகத்தைப் பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி, முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் உட்படச் சமூக வலைதளங்களிலும் பகிரப்படும் ‘கோயபல்ஸ்’ பிரச்சாரச் செய்திகளில் துளியும் உண்மையில்லை.

ADVERTISEMENT

பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக்கொள்ளவும், அரசியல் உள்நோக்கத்துடனும் பரப்பி வரும் இத்தகைய செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைத்தன்மையற்றவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். எவ்விதமான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளும் நடைபெறாத நிலையில், இச்செய்திகள் முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்டவை.

சிலர் தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப அரசியல் சூழலைக் கணிப்பதாக நினைத்துக்கொண்டு, ஒரு திரைப்படத்திற்கு ‘கதை, திரைக்கதை, வசனம்’ எழுதுவது போலக் கற்பனையான செய்திகளை உருவாக்கி வருகிறார்கள். இத்தகைய செய்திகள் அவர்களின் தனிப்பட்ட கற்பனைத் திறனைப் பறைசாற்றுகிறதே தவிர, இதில் எள்ளளவும் உண்மையில்லை. ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னதான் முயன்றாலும், தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முடியாது.

ADVERTISEMENT

காரணம், இன்று தமிழகத்தின் அரசியல் களத்தில் 234 தொகுதிகளிலும் மாபெரும் முதன்மை சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. மாற்றத்தை விரும்பும் மக்களின் பேராதரவோடு, வரும் தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காணும் அளவிற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இன்று தமிழகத்தின் எந்தத் திசையில் திரும்பினாலும் மக்களின் உற்சாகமான ‘விசில் சத்தம்’ மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. இது வெறும் சத்தம் அல்ல, 234 தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஒரு பெரும் மாற்றத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான உண்மையான சாட்சி.

எனவே, ஆதாரமற்ற, அதிகாரப்பூர்வமற்ற மற்றும் உள்நோக்கத்துடன் செய்திகளாகப் பரப்பப்படும் வதந்திகளையும், யூகங்களையும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் “காங்கிரஸ் இன்னமும் ஓபனா நம்ம கூட வராம இருக்கு.. ஒருவேளை நம்மளை வெச்சு திமுக கிட்ட அதிகமா சீட்டு வாங்குதோ காங்கிரஸ்? அப்படின்னு விஜய்க்கு ஒரு வலுவான சந்தேகமும் ஒரு சைடுல இருக்கு” என பிப்ரவரி 6-ந் தேதி பதிவு செய்திருந்த நிலையில் தற்போது தவெக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share