விஜய் பிரச்சாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதையொட்டி இன்று (மார்ச் 30) பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து பெரம்பூர் பணிமனை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அதிகமானோர் குவிந்திருந்தனர். சிலர் பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு விஜய்யை பார்க்க ஓடும் காட்சிகளும் வெளியாகின.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், “இன்று சென்னையில் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான குறைபாடுகளை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான விஜய், உரிய அனுமதி பெற்று இன்று பெரம்பூரில் இருந்து இரண்டாவது பிரச்சார இடமான கொளத்தூருக்கு வாகன பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தார்.
எனினும் இந்த பேரணிக்காக தகுந்த காவல்துறையினரோ அல்லது போக்குவரத்து மேலாண்மைக்கான எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளோ அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
சாலையில் திரண்டிருக்கும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பெரும் வரவேற்பு காரணமாக பிரச்சார வாகனங்கள் முற்றிலுமாக நகர முடியாத நிலை ஏற்பட்டது.
முதல் பிரச்சார இடமான பெரம்பூரில் இருந்து இரண்டாவது இடமான கொளத்தூருக்கு செல்ல முடியாமல் பேரணியை பாதியிலேயே நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.
போக்குவரத்து ஒழுங்குமுறை இல்லாத சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு தேவையற்ற குழப்பத்தையும் உருவாக்குகிறார்கள்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரது நியாயமான தேர்தல் பிரச்சாரம் பணிகளை இது கடுமையாக பாதிக்கிறது.
தேர்தல் நடைபெறும் சமயத்தில் இத்தகைய அலட்சிய போக்கு நிர்வாக ரீதியான பாகுபாட்டையும் சமமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது .
இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகன பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு மற்றும் முறையான போக்குவரத்து மேலாண்மையை உறுதி செய்ய சென்னை மாநகர காவல் துறைக்கும் காவல், ஆணையருக்கும் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தவெக தலைமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?
அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?
கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.
திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?
முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா?
ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
