வைஃபை ஆன் செய்ததும், ‘நடப்பது எல்லாம் நன்மைக்கா?’-ன்னு கேள்வியை எழுப்பியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்..
என்னய்யா.. விஜய் பிரசார மேட்டரா?
அதானே ஹைலைட்.. விஜய் நேத்து ஈரோட்டுல பேசுன பேச்சுதான் ரொம்பவே இம்பேக்ட் ஆகியிருக்கு.. தவெக கட்சிக்காரங்க மட்டுமல்ல.. வெவ்வேற செக்ஷனிலும் விஜய் பேச்சு இம்பிரஸ் ஆகியிருக்குன்னு பேசுறாங்க..
அதுல, ”போன மாசம் ஈரோடு கோபியில் இபிஎஸ் பேசுன கூட்டத்துக்கு 30,000 பேர் வந்திருந்தாங்க.. விஜய் நேத்து கூட்டத்துக்கு அதைவிட பிரம்மாண்டமாக ஏற்பாடு செஞ்சு தவெகவினரை வரவழைச்சட்டார் அண்ணன்”-ன்னு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒரே புளகாங்கிதமப்பா..
ஓஹோ.. செங்கோட்டையன் அதிகமா பேசலை போல?
செங்கோட்டையன் 3 நிமிசம்தான் பேசுனாரு.. அதுலயும் கூட, “ எங்க அண்ணனை விஜய் பேசுறதுக்கு முன்னாடி பேச வைப்பாங்கன்னு பார்த்தோம்.. ஆனா நிர்மல்குமாருக்கு முன்னாடி பேச வைச்சது ரொம்பவே அதிர்ச்சியாகத்தான் இருந்துச்சு.. எங்க அண்ணனோட சீனியாரிட்டிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கனும்..”-னு வருத்தத்தையும் செங்ஸ் ஆதரவாளர்கள் கொட்டுறாங்க..
அதே மாதிரி, தவெக பொருளாளர் வெங்கட்ராமன் காரை உள்ளே விடாம போலீஸ்காரங்க தடுக்க சலசலப்பாகிடுச்சு.. காஞ்சிபுரம், புதுச்சேரிக்கு பிறகு ஈரோட்டுலயும் வெங்கட்ராமன் காரை உள்ளே விடாதது சர்சையாகிடுச்சுப்பா..
சரி.. விஜய் பேச்சுக்கு அதிமுக, திமுகவோட ரியாக்சன்ஸ் எப்படியாம்?
சொல்றேன்யா.. விஜய் பேச்சை எடப்பாடி உட்பட அதிமுக ’தலை’கள் பலரும் லைவ்வா பார்த்திருக்காங்க.. விஜய் பேசி முடிச்சதும் எடப்பாடியும் பார்ட்டி சீனியர்களும் போனிலும் நேரிலும் சில பல ஆலோசனை செஞ்சிருக்காங்க.. இதை பத்தி அதிமுக சீனியர் ஒருவரிடம் பேசுனப்ப, “விஜய் பேச்சு எங்க எல்லாருக்கும் ரொம்ப அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு.. முதல்ல பெரியார் அண்ணாவை எடுத்துகிட்டாரு.. சரின்னு அமைதியா இருந்தோம்.. அப்புறமா ’தலைவரை’ (MGR) பத்தி பேசுறதும் அவரு படத்தை போடுறதுமா இருந்தப்பவும் நாங்க கண்டுக்கலை.. இப்ப தலைவர், அம்மாவையும் சேர்த்து எடுத்துகிட்டாரு.. அதுவும் தலைவரும் அம்மாவும் திமுகவை தீய சக்தின்னு சொல்றதை அப்படியே டேக் ஓவர் பண்ணிட்டதுதான் எங்க எல்லாராலும் ஏத்துக்க முடியலை.. திமுகவுக்கு எதிராக எங்ககிட்ட இருக்கிற ஒரே பிரம்மாஸ்திரமே, “திமுக தீய சக்தி”ன்னு சொல்றதுதான்.. அதையே ‘தூக்கிட்டாரு விஜய்’ன்னுதான் எங்களுக்கு வருத்தம்..
இதைபத்திதான் பொதுச்செயலாளர்கிட்ட பேசுனோம்.. அப்ப, “விஜய் இப்படி பேசுறதுல நமக்கு பெரிய ஆபத்தும் இருக்கு.. திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் எல்லாம் நமக்குதான் வந்துகிட்டு இருக்கு.. ஆனால் விஜய் இப்படி பேசுனா திமுக எதிர்ப்பு ஓட்டு சிதறும்.. அது திமுகவுக்கு சாதகமா போயிடும்.. திமுகவுக்கு மாற்று தான்னு விஜய் கொண்டு போறது நமக்கு சரியானதும் இல்லை.. நாம இன்னும் ஸ்டிராங்கா ஒர்க் அவுட் செய்யனும்”னு ஷேர் செஞ்சிகிட்டோம்..
அதுமட்டுமல்லாம, “ஆளும் கட்சியா இருந்தாலும் அஜாக்கிரதையா இல்லாம, திருவண்ணாமலையில திமுக இளைஞர் அணி நிர்வாகிகளோட வடக்கு மண்டல சந்திப்பை நடத்தியிருக்கு.. பல்லடத்துல மகளிர் மாநாடு நடத்துது.. ஒவ்வொரு மண்டலத்துலயும் இப்படி கூட்டம் நடத்துறாங்க.. பாஜகவுலயும் மகளிர் அணி ஆலோசனை, மாநாடுன்னு பிஸியா இருக்காங்க..நாமும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநாட்டை நடத்தனும்.. கோவை, திருச்சி, மதுரைன்னு எங்காயவது நடத்தனும்.. அதுக்கு ஒருத்தர் செலவை பார்த்துக்கனும்”னும் சீரியசாக ஆலோசனை நடந்துச்சுங்க சார்” என்கின்றனர்.
அதே நேரத்துல, ”விஜய்-க்கு பதிலடி தர்றோம்னு யாரும் ஓபனா எதுவும் பேசாம இருங்க.. நாம நம்ம வேலையைப் பார்ப்போம்னு இபிஎஸ் ஆர்டர் போட்டதாகவும்” அதிமுக சீனியர்கள் நம்ம்டம் சொன்னாங்கப்பா..
சரிய்யா.. திமுக என்ன சொல்லுதாம்?
திமுக சைடுலயும் விஜய்யோட பேச்சை ரொம்ப சீரியசாகவே பார்க்குறாங்களாம்.. அறிவாலய வட்டாரங்களில் நாம பேசுனப்ப, “விஜய் எங்களைத்தான் ஓவரா அட்டாக் செய்யுறாரு.. அதுவும் ‘கேரக்டரையே புரிஞ்சுக்கலை’ன்னு சிஎம் பேசுனதை வெச்சு ‘சார்…சார்னு’ விஜய் பேசுனது எல்லாம் செம்ம எரிச்சல்தான்.. என்ன செய்ய.. யாருமே விஜய்க்கு பதில் தராதீங்கன்னு சிஎம் ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டிருக்காரு..
எங்களோட கவலை என்னானா, எங்களுக்கு எதிரான வாக்குகள் அதிமுக- தவெக-ன்னு சமமா பிரியுமா? பிரியாதா? அப்படிங்கிறதுதான்.. எங்களுக்கு எதிரான ஓட்டு ரெண்டு கட்சிக்கும் சமமா பிரிஞ்சா மும்முனைப் போட்டி உருவாகும்.. அது எங்களுக்கு களத்துல ஈஸியா இருக்கும்..
அதுக்கு பதிலா, எங்களுக்கு எதிரான ஓட்டுகளை தவெக அதிகமாக வாங்குனா இரண்டு முனைப் போட்டி உருவாகும்.. விஜய் சொல்ற மாதிரி DMK Vs TVK-ன்னு இரு முனை போட்டின்னா களம் செம்ம டஃபாகிடுமே..” என அவங்க கவலையை சொல்றாங்க..
அப்படியா.. தவெக அடுத்து என்ன செய்யப் போறாங்களாம்?
பெரிய சலசலப்பு இல்லாம சக்சஸா ஈரோடு மீட்டிங் முடிஞ்சதால ரொம்ப தெம்பா அடுத்து டிசம்பர் 30-ந் தேதி சேலத்துல பிரசாரம் செய்யப் போறாராம் விஜய்… அதுக்கான ஏற்பாடுகளைத்தான் தீவிரமா செய்யுறாங்க என சொல்லியபடியே சென்ட் பட்டனைத் தட்டிவிட்டு ஆப் லைன்னுக்கு போனது வாட்ஸ் அப்.
