தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மூன்றாவது முறையாக விசாரணை:
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 10-ம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தேர்தல் தொடர்பான முக்கியப் பணிகள் இருப்பதால் கால அவகாசம் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இன்று (மார்ச் 15) ஆஜராக புதிய சம்மன் வழங்கப்பட்டது. அதனை ஏற்று விஜய் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பாஜக தரப்பில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த விசாரணை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
