வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.
இந்த குழு கரூரில் தங்கி விசாரணை நடத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசியல் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கில் எஸ்.ஐ.டி விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது எப்படி’ என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கேள்வி எழுப்பியது.
இந்தவழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் எஸ்.ஐ.டி விசாரணைக்கு எதிரான வழக்கிலும், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிலும் உச்ச நீதிமன்றம் வரும் திங்கள் கிழமை அக்டோபர் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.