அப்போது மவுனம்… இப்போது அறிக்கை வெளியிட்டது ஏன்?: ரஜினிக்கு தவெகவினர் கேள்வி!

Published On:

| By Kavi

ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு ரஜினி கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் இதுதொடர்பாக தவெகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

திமுக கொடுத்த அழுத்தத்தால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றும் ஆனால் விஜய் மனவலிமையோடு செயல்படுகிறார் என்றும் கடந்த 12ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருந்தார். 

ADVERTISEMENT

அவர் பேசி 4 நாட்களுக்கு பிறகு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கேப்ஷனாக, முற்றுபுள்ளியை வைத்து தனக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். 

ADVERTISEMENT

அதேசமயம் ஆதவ் அர்ஜூனா கூறியது முற்றிலும் தவறானது என கூறியிருந்த ரஜினிகாந்த்  “காலம் பேசாது, ஆனால் பொறுத்திருந்து பதில் சொல்லும்” என்று பதிலடி கொடுத்திருந்தார். 

இந்தநிலையில் விஜய் ரசிகர்களும்  தவெகவினரும் ரஜினி அறிக்கைக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

தவெக மதுரை வடக்கு ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில், “முக ஸ்டாலின், உதயநிதி, சீமான், எடப்பாடி பழனிசாமி, சாட்டை துரைமுருகன், திருமாவளவன் மற்றும் பல அரசியல் தலைவர்களின் கீழ்தரமற்ற விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் மௌனம் காத்திருந்த  ரஜினிகாந்த இந்த விவகாரத்தில் ஐந்து நாட்களுக்கு பின் இன்று பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

கவனம் கொள்ளுங்கள், இன்று சிபிஐ விசாரணையே நமது முக்கிய கண்ணாக இருக்க வேண்டும்!

தலைமையில் கலந்துரையாடி ஆதவ் அர்ஜூனா தன் பதிலை கூறுவார். தலைமை பார்த்துக்கொள்ளும்!

நாம் கவனம் சிதறாமல் தேர்தல் பணியை நோக்கி நகர்வோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. 

அதுபோன்று, ரஜினி  அரசியல் பயணத்தை தொடங்கியபோது அவருக்கு எதிராக பேசிய அரசியல் தலைவர்களின் பேச்சை வைரலாக்கி வருகின்றனர். 

சிலர் தனிநபர் தாக்குதலையும், இழிவான சொற்களை பயன்படுத்தியும் ரஜினியின் அறிக்கைக்கு கீழ் பதிவு செய்து  வருகின்றனர்.

தவெகவினர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்,  “காலம் பேசாது, ஆனால் பொறுத்திருந்து பதில் சொல்லும்” என  முதிர்ச்சியான பதிலை அவர் அளித்திருக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் வந்துகொண்டிருக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share