திருவள்ளூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி அக்கட்சியின் பனையூர் தலைமை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெகவில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி நடப்பதாக குற்றம் சாட்டியதையும் மற்றொரு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்து பேசியதையும் நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் நிர்வாகிகள் இன்று டிசம்பர் 14-ந் தேதி ஒன்று திரண்டனர். தவெக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக வந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது,
“மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஒழிக”
பணமுதலையே கட்சியை விட்டு வெளியேறு
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்
தளபதியே! தளபதியே! அநியாயம் நடக்குது தளபதியே!
தளபதியே தளபதியே! விசாரணை செய்யுங்க தளபதியே” ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், கட்சியினரிடையே கட்சி பதவிக்காக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்; ஆதவ் அர்ஜூனாவின் படத்தை பேனரில் போட்டதற்காக பிரதீப் என்ற வட்டச் செயலாளரை பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றனர்.
