நடிகர் விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசவில்லை. கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. விஜய் தார்மீக பொறுப்பேற்று இருந்தால் நீதிமன்றம் அவரை கண்டித்து இருக்காது. ஆனால் அதை செய்ய விஜய் தவறிவிட்டார்.
அதேசமயம் கரூரில் நடைபெற்ற நெரிசல் சம்பவம் போல மற்ற கட்சிகளின் கூட்டங்களிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சம்பவத்தில் விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த விஷயத்தை பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக நடவடிக்கை எடுத்துள்ளார். என நான் பொதுவாக தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். நியாயமான விஷயத்தை கூறினால் முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள்” என்றார்.
மேலும் “கரூர் சம்பவத்தை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உயிரிழப்பு நேரத்தில் நரித்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை கண்டிக்கிறோம். தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர, ஆளும் கட்சி மீது எடப்பாடி பழனிசாமி பழி போடுகிறார். கரூர் சம்பவம் ஒரு விபத்து தான். இதில் யார் மீதும் பழி போட முடியாது. தமிழகத்தில் முன்னதாக ஏராளமான கூட்ட நெரிசல் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்கவில்லை” என குற்றம் சாட்டினார்.
மேலும் பழனிசாமியை தவிர குமாரசாமி, குப்புசாமி என யார் வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராகலாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜகவை சேர்ந்தவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் அவர்கள் அறிவிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றார்.