தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இன்று (ஜனவரி 21) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல், “எங்களது பங்காளி சண்டைகளெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை.இதைத் தொடர்ந்து, என்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை வரவேற்பதாக அவரது பெயரை குறிப்பிட்டு எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில்,“மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
