விஜய் சொன்னது போல வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-தவெக இடையே தான் போட்டி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவம்பர் 6) அமமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “சட்டமன்ற தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி. வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3ஆவது இடத்திற்கு செல்லும்.விஜய் தலைமையில் கூட்டணி வலுவாக இருந்தால் கடுமையான போட்டி இருக்கும் என்றார்.
மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. ஆனால் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் திமுகவில் சேர்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு, எங்களோடு பலர் தொடர்பில் உள்ளனர். ஆனால் பழனிசாமியை நீக்குவதற்கு சரியான இடம் திமுக என்று அவர்கள் நம்புகிறார்கள். அதை நினைத்துதான் அவர்கள் சென்றிருப்பார்கள்.
அமமுகவை பொறுத்தவரை திமுக, அதிமுக அளவிற்கு பெரிய கட்சி இல்லை. பழனிசாமியை வீழ்த்த அமமுக சரியான இடம் என்பதை தாண்டி அமமுக தனியாக வீழ்த்தி விடமுடியாது. திமுக அவரை தனியாக வீழ்த்தக் கூடிய பெரிய இடமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார்.
பழனிசாமி என்ற துரோக சக்தி இந்த தேர்தலில் உறுதியாக வீழ்த்தப்படும். அந்த கட்சியில் இருக்கும் வேறு யார் மீதும் கோபம் இல்லை.
எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட பழனிசாமி எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். வருங்காலத்தில் துரோகம் என்ற சிந்தனையே எந்த அரசியல் தலைவருக்கும் வரக்கூடாது என்பதற்காக தான் அமமுக உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எடப்பாடியை வீழ்த்திய பின்னர் புரட்சி தலைவர் சட்ட திட்டங்களின் படி அதிமுக மறுமலர்ச்சி பெறுவதற்கு அமமுக உரிய நடவடிக்கை எடுக்கும். ” என தெரிவித்துள்ளார்.
