பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப்டம்பர் 3) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஆளும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார்களா என குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் இருவரும் கூட்டணியில் தான் உள்ளனர் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி வந்தார்.
பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது அவரை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஒரு சிலரின் துரோகத்திற்கு எதிராக தான் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. அவர்கள் திருந்துவார்கள் என நம்பினோம். ஆனால் அதற்கு எந்த வாய்ப்பும் தெரியவில்லை. அதனால் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம்.
துரோகம் தலைவிரித்து ஆடுகின்றது. அதனால் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என அதற்கு முயற்சி செய்த பாஜக கூட்டணியில் இருந்தோம். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இப்போது அமித்ஷாவின் முயற்சி பலனளிக்கும் என காத்திருந்தோம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை.
தங்களை முதலமைச்சராக மார்தட்டி கொள்பவர்கள் தாங்கள் செய்த துரோகத்தை நியாயப்படுத்தி, ஊர் ஊராகச் சென்று கூச்சலிட்டு வருகிறார்கள்.
கடந்த 3 மாதங்களாக பொறுமையாக முடிவெடுக்கலாம் என்று நான் இருந்தேன். ஆனால், ‘அவர்களை தோளில் தூக்கி செல்ல நாம் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. நல்ல முடிவெடுக்க வேண்டும்’ என தொண்டர்கள் என்னை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து கூறி வந்தார்கள். டெல்லி தலைமையும் நல்ல முடிவெடுப்பதாக தெரியவில்லை.
எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பேன்” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று நமது மின்னம்பலம்.காம் தளத்தில் டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ‘சம்பவங்கள்’- மீண்டும் ‘செங்கோட்டையன் கலகம்’.. என்ன நடக்குது அதிமுகவில்? முழு பின்னணி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “கடந்த சில நாட்களாகவே, “பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக புறக்கணிப்பா? அமமுக தொண்டர்கள் அதிருப்தி- விஜய் கட்சி கூட்டணியில் டிடிவி தினகரன் சேருகிறாரா?” என ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் போட்டு வேட்டு வெடித்து கொண்டிருந்தன.
இந்த பரபரப்புக்கு நடுவேதான், ” 2026 தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு எல்லாம் கிடையாது.. தேர்தல் கூட்டணி பற்றி டிசம்பரில்தான் முடிவெடுப்போம்” என திடீரென நேற்று (செப்டம்பர் 1) பாஜக கூட்டணிக்குள் வெடிகுண்டு வீசினார் டிடிவி தினகரன்.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில்தான் தாம் இருப்பதாக சொல்லி வந்த தினகரன், நேற்று ‘டோனை’ தலைகீழாக மாற்றி பேச பாஜக தலைவர்கள் ரொம்ப ஷாக்கிட்டாங்க..
தினகரனின் இந்த ‘ஆவேசமான’ நிலைப்பாட்டுக்கு வேறு யாரும் காரணமில்லையாம்.. சாட்சாத் எடப்பாடி பழனிசாமிதான் முழு காரணமாம்” என குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் விரிவாக எழுதியிருந்தோம்.
இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே ”தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என இன்று அறிவித்து தமிழக அரசியலில் புதிய கூட்டணிக்கான புயலை கிளப்பியுள்ளார் டிடிவி தினகரன்.