முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த மாதம் இறுதியில் விலகினார்.
அதோடு, பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் அவர் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் மெசேஜ் அனுப்பியதற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.
இந்தசூழலில் ஓபிஎஸுடன் பேச பாஜகவினர் முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. அதோடு ஓபிஎஸை விமர்சித்து பேச வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 12) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “பிறகு பேசலாம்” என்று மலுப்பலான பதிலை அளித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “ஓபிஎஸும் நானும் தேவை இருக்கும் போது பேசிக்கொள்வோம். அவரை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள்தான் சமாதானப்படுத்தி கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். பாஜக சார்பில் இதுவரை யாரும் பேசவில்லை என்று ஓபிஎஸ் நேற்று காலை என்னிடம் சொன்னார். பி.எல்.சந்தோஷ் தன்னை பார்க்க அழைத்ததாகவும், அதற்கு தான் வரமாட்டேன் என்று மறுத்ததாகவும் வந்த செய்தி பொய் என்றும் ஓபிஎஸ் கூறினார்” என தெரிவித்தார்.