அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிதீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Turning Point USA என்ற இளைஞர் அமைப்பை தமது 18 வயதில் நிறுவிய தீவிரமான வலதுசாரி சார்லி கிர்க். டொனால்ட் டிரம்ப்பை மிக தீவிரமாக ஆதரித்து பிரசாரங்களை மேற்கொண்டார். டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப்புடன் இணைந்து இந்த பிரசாரங்களை சார்லி கிர்க் மேற்கொண்டார். டிவி விவாதங்களில் டிரம்ப்புக்காக உரத்த குரலில் பேசியவர் சார்லி கிர்க்.
இந்த பின்னணியில் அமெரிக்காவின் Utah Valley பல்கலைக் கழக நிகழ்ச்சிக்கு சார்லி கிர்க் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்லி கிர்க், மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் அண்மை காலமாக வலதுசாரி- இடதுசாரி ஆதரவாளர்களிடையே மோதல்கள் தலைதூக்கி உள்ள நிலையில் சார்லி கிர்க் படுகொலை நிகழ்ந்துள்ளது. இந்த படுகொலைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.