ADVERTISEMENT

டிரம்ப் 50% வரி: ‘வராக்கடன்’ நெருக்கடியில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்

Published On:

| By Mathi

Loan Regulations for MSMEs

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 50% வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன; இந்நிறுவனங்களின் கடன்களுக்கான விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது: அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளன; இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக (NPAs) ஆக மாறும் அபாயமும் உள்ளது என எனது கவனத்திற்கு தொழில் முனைவோர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன. ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள்—அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ள இவை – மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது. இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது; அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி, விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரெனக் கையிருப்புகள் அதிகமாகக் குவிந்து வருகின்றன.

நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலைமை குறு சிறு நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும்; இதன் விளைவாக அந்நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும்.

இந்தச் சூழலில், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share