டிரம்ப் vs ஜோஹ்ரான் மம்தானி: புதிய வரலாறு படைப்பாரா இந்திய வம்சாவளி?

Published On:

| By Minnambalam Desk

 Trump vs Zohrab Mamtani

100% கம்யூனிச பைத்தியக்காரர்… இந்த வார்த்தைகளை உதிர்த்தது வேறு யாருமல்ல, இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையை நான்தான் நிறுத்தினேன் என்று 18ஆவது முறையாக கூறிக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான். எதற்காக அவர் இந்த அளவுக்கு வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார் என்றால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகரின் மேயர் வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டது தான். Trump vs Zohrab Mamtani

நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நியூயார்க் நகர மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் போட்டியிடவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியில் வேட்பாளர் தேர்தலில் இருவர் போட்டியிட்டனர். ஒருவர் ஆண்ட்ரூ க்யூமோ மற்றொருவர் ஜோஹ்ரான் மம்தானி.

இதில் ஆண்ட்ரூ க்யூமோ 2011 முதல் 2021 வரை ஆளுநராக பதவி வகித்தவர். பின்னர் பாலியல் புகார் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் அரசியலுக்கு வரும் ஆசையில் வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டு ஜோஹ்ரான் மம்தானியிடம் தோல்வியுற்றுள்ளார்.

சரி யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி? Trump vs Zohrab Mamtani

இவரை ஏன் சமூக வலைதள போராளிகள் முதல் அமெரிக்க அதிபர் வரை விமர்சிக்க வேண்டும் என்பதற்கான விடையை தேடுவதற்கு முன்னர் யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி என்பதை பார்க்கலாம் 

குஜராத்தை பூர்விகமாக கொண்டவரான  கல்வியாளர் மஹ்மூத் மம்தானிக்கும்  மற்றும் பிரபல பாலிவுட் இயக்குநருமான மீரா நாயருக்கும் மகனாக பிறந்தவர்தான் ஜோஹ்ரான் மம்தானி. இவருடைய தந்தை மஹ்மூத் மம்தானி கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதோடு ஆப்கானிஸ்தான் பிரச்சினையை ஆராயும் நூலான  Good Muslim, Bad Muslim: America, Cold War and the Roots of Terror என்ற புகழ் பெற்ற நூலையும்  எழுதியுள்ளார்.   இந்த நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது.

ஜோஹ்ரான் தாயார் மீரா நாயர் மிசி சிப்பி மசாலா, தி நேம் சேக்,  சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  மீரா பாய் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றையும்  நடத்தி வருகிறார்.  2012 ம் ஆண்டில் நாட்டின் பத்மபூஷன் விருதை வென்றவர் இந்த மீரா நாயர். 

தந்தை கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால் ஜோஹ்ரான் மம்தானியும் தென்னாப்பிரிக்காவின் மிகவும் பழமையான பள்ளியான புனித ஜார்ஜ் கிராமர் பள்ளியில் பயின்றார். ஜோஹ்ரான் மம்தானிக்கு 7 வயதாகையில் அவரது குடும்பம் நியூயார்க் நகரத்துக்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள கல்வி நிலையங்களில் கல்வியைப் பெற்ற ஜோஹ்ரான் மம்தானி 2018 ல் அமெரிக்க குடிமகன் ஆனார். 

அதன் பின்னர் சமூகம் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த ஜோஹ்ரான் மம்தானி வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பி செலுத்த முடியாத நிலை வரும்போது அவர்களுக்கு அந்த சிக்கலில் இருந்து விடுபடும் வழிகளை ஆலோசனைகளாக கூறும் ஃபோர்க்ளோசர் கவுன்சிலர் வேலையை செய்து வருகிறார். 

இந்தப் பணிதான் மம்தானியை அரசியலை நோக்கித் திருப்பியது. நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் இந்த பணியை மேற்கொள்ளும் மம்தானி வங்கிக் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் மக்களின்  அவல நிலைக்குக் காரணம் அவர்களின் நிதி நிலை மட்டுமல்ல, அரசியல் சார்ந்த  கொள்கைகளையும் உள்ளடக்கியது என்பதை உணர்ந்தார்.

இந்த கொள்கைகளை மாற்றவேண்டும் என்றால் அரசியல் அதிகாரம்தான் ஒரே வழி என்பதை உணர்ந்த மம்தானி, 2020-ஆம் ஆண்டு நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜனநாயக சோஷலிச கட்சி சார்பில்  போட்டியிட்டார். முதல் முயற்சியே முழு வெற்றியை கொடுக்க நியூயார்க் மாநில சட்டமன்றத்தின், முதல் சோஷலிச பிரதிநிதி மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமைகளைப் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் மேயர் வேட்பாளாராக மம்தானி தேர்வு செய்யப்பட்டாலும் ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களோடு பல்வேறு விசயங்களில் முரண்பட்டே நிற்கிறார் மம்தானி, தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,  மதம் மற்றும் இதர கூறுகளின் அடிப்படையில் குடியுரிமை பிரிக்கப்படும் எந்த ஒரு நாட்டையும் நான் ஆதரிக்க மாட்டேன். அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை என்று தெளிவுபடுத்தியதோடு இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை  கடுமையாக எதிர்க்கிறார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடும் பாலஸ்தீன போராட்டங்களை ஆதரிக்கிறார். க்ளோபலைஸ் தி இன்டிஃபடா  (Globalise the Intifada)” என்ற முழக்கத்தை மனித உரிமைகளுக்கான பாலஸ்தீன மக்களுடைய போராட்டத்தின் அடையாளம்” என்றும், சமத்துவத்திற்கான குரல்தானே ஒழிய வன்முறைக்கான குரல் இல்லை என்றும் வாதிடுகிறார்.  

இன்டிஃபடா என்பது என்ன? Trump vs Zohrab Mamtani

பாலஸ்தீனிய போராட்டங்களை குறிப்பிடுவதே இந்த க்ளோபலைஸ் தி இண்டிஃபடா என்ற சொற்றொடர் இந்த போராட்டங்கள் அதாவது இண்டிஃபடா இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக 1987 முதல் 1993 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

அப்போது கல்லெறிதல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தின்போது பாலஸ்தீனிய போராளிகள் தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூர தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் பின்னர்தான் இந்த இண்டிஃபடா, க்ளோபலைஸ் தி இண்டிஃபடா  (Globalise the Intifada) என்று விரிவாக்கம் பெற்றது.  

மம்தானியின் இந்த முழக்கம்  யூத வாக்காளர்களிடையே அச்சத்தையும், சர்வதேச அளவில் வன்முறைக்கும் வழி வகுக்கும் என்பது ஜனநாயகக் கட்சியில் உள்ள சில தலைவர்களின் கருத்து. தற்போதைய நியூயார்க் மேயரும்  ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான  எரிக் ஆடம்ஸ் மம்தானியை “நச்சு எண்ணெய்” விற்பனை செய்பவர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேயர் தேர்தல் வாக்குறுதிகள்

இந்த நிலையில் மம்தானி மேயர் தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். வீடுகளின் வாடகையை உயர்த்தாமல் பார்த்து கொள்வது,  நம்மூரில் உள்ளது போல இலவச பேருந்து சேவை, அனைத்துக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும்  பராமரிப்பு, அரசே நடத்தும் பலசரக்கு கடைகள், மலிவு விலையில் வீடுகள் என்று பலவேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். 10 பில்லியன் அளவுக்கு செலவு பிடிக்கும் இந்த திட்டங்களுக்கான நிதியை நியூயார்க்கில் வசிக்கும் பெரும் பணக்காரர்களிடம் இருந்து வரியாக வசூலிப்பேன் என்றும் கூறி வருகிறார். 

இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என்று கூறும்  நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வெற்றி பெறுவதற்காக மம்தானி எதை வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசி வருவதாக விமர்சித்துள்ளார். 

இந்த நிலையில்தான் மம்தானியை 100% கம்யீனிச பைத்தியக்காரர் என்று கடும்சொற்களால் வசைபாடியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராக மம்தானி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ட்ரூத்  என்ற  சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டிரம்ப் “இறுதியாக எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது, ஜனநாயக கட்சியினர் எல்லையை மீறிவிட்டார்கள். 100% கம்யூனிஸ்ட் பைத்தியக்காரரான மம்தானி ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்றும், டெம் பிரைமரியை வென்று, மேயராகவதற்காக வருகிறார். 

நாம் தீவிர இடதுசாரிகளைக் கண்டிருக்கிறோம். ஆனால் இது அபத்தமாகி வருகிறது. அவர் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறார், அவரது குரல் எரிச்சலூட்டுகிறது. அவர் புத்தியாசலியான நபர் இல்லை. என்று தனது வன்மத்தை கொட்டியுள்ளார் டிரம்ப். 

டிரம்பின் வன்மமும் மம்தானியின் பேச்சும் Trump vs Zohrab Mamtani

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூ யார்க் வந்தால் நவம்பர் 2024-ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்ட பிடிவாரண்ட்டை வைத்து அவரை கைது செய்வேன்” எனப் பேசியிருக்கிறார் மம்தானி .  இந்தப் பேச்சுதான் அதிபர் டிரம்ப் மம்தானிக்கு எதிராக  இவ்வளவு வன்மத்தோடு வார்த்தைகளை வெளியிட்டிருப்பதற்கான காரணங்கள். 

டிரம்ப் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். அதனால்தான் இஸ்ரேல் ஈரான் போரில் மூக்கை நுழைத்து ஈரானுக்கு எதிராக தனது படைபலத்தை பயன்படுத்தினார். இது மட்டுமல்ல கடந்த மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த  மம்தானியிடம் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கு பதிலளித்த அவர், மோடி ஒரு போர்க் குற்றவாளி காரணம் குஜராத்தில்  முஸ்லிம்களை கொத்துக் கொத்தாகக் கொல்ல மோடி  உதவி செய்தார்.   பெஞ்சமின் நெதன்யாகுவை பார்ப்பதைப் போன்றே, மோடியையும் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார் மம்தானி. 

புதிய வரலாறு 

நவம்பரில் நடைபெறும் தேர்தலில் மம்தானி வெற்றி பெற்றால் முதல் முஸ்லிம் மற்றும் இந்தியவம்சாவளி  அமெரிக்க மேயர் என்ற வரலாறு உருவாகும். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்ற இரவில் பேசிய மம்தானி, “இன்றிரவு நாம் வரலாறு படைத்துள்ளோம். ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரியும்” என்ற நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வாக்கியத்தைக் கூறினார்.

 நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையும்பட்சத்தில் அவரது அறைகூவல்களுக்கு இன்னும் வலிமை சேரும் என்பதில் ஐயமில்லை. 

அ.ஜெ.ராஜசேகர்

ஊடகவியலாளர் Trump vs Zohrab Mamtani

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share