வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், வெனிசுலா மீதான அமெரிக்க ராணுவம் தாக்குதல் விவகாரத்தில் ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், வெனிசுலாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலுக்கு பின் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த வெனிசுலா நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரங்களை வழங்க அமெரிக்க நேரப்படி 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
