அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 25% வரி விதித்துள்ளதாக இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளார்.
வல்லரசு நாடான ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் இராணுவ உபகரணங்களையும் எரிவாயுவையும் வாங்கிக் கொண்டிருக்கிறது இந்தியா.

மேலும் ரஷ்யா மீது வர்த்தக தடைகள் அதிகமாக உள்ளது, எனினும் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்த வரியானது “தண்டனை” என்ற வகையில் அமையும் எனத் அவர் தெரிவித்தார். மேலும் இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social) மூலம் வெளியிட்ட பதிவு:
“இந்தியா நம்முடைய நண்பர் தான். ஆனால் ஆண்டாண்டுகளாக இந்தியாவுடன் பெரிய அளவில் வர்த்தகம் நடக்கவில்லை. காரணம், இந்தியாவின் வரி விகிதங்கள் உலகிலேயே மிக உயர்ந்தவை மற்றும் குழப்பமான, கடுமையான வர்த்தக தடைகள் உள்ளன” என டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவு!
மேலும் “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது. ஆனால் இந்தியா, ரஷ்யாவிடம் பெரும்பாலான இராணுவ உபகரணங்களையும், எரிசக்தியையும் வாங்குகிறது. இது உக்ரைன் போருக்குப் பெரிதும் ஆதாரமாக உள்ளது. அனைவரும் ரஷ்யாவை ‘போரை நிறுத்துங்கள்’ என்று கூறும் நேரத்தில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்குவது நல்லது இல்லை.
அதனால் அடிப்படை வரியான 10 சதவீதத்துடன், தற்போது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியையும் தண்டனையாக செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 1 முதல் இது அமலுக்கு வரும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “இந்தியா எனது நண்பர். அவர்கள் பாகிஸ்தானுடனான போரை என் வேண்டுகோளின்படி முடித்தனர். இந்தியா நல்ல நாடு தான், ஆனால் உலகில் மிக அதிக வரிகளை வசூலிக்கும் நாடாகும். இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை” என்று டிரம்ப் கூறிய காணொளியை ANI வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் 10% அடிப்படை வரி மற்றும் அதிகபட்சமாக 50% வரி விதிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை 90 நாட்கள் இடைநிறுத்தி, அதற்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த வாய்ப்பு வழங்கினார். அந்த இடைவேளையின் முடிவில், ஆகஸ்ட் 1 முதல் வரிகள் 70% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது 25% வரி விதித்துள்ளார்.