இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தையொட்டி வரலாற்றில் மிக முக்கியத்துவமான நிகழ்வு ஒன்று அமெரிக்காவிலும் நடந்துள்ளது. 605 அடி உயர கோபுரத்தில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
அமெரிக்காவின் சியாட் நகரில் இந்திய வம்சாவளி மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். சியாட் நகரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது அளவில் உள்ளது. இந்நிலையில் சியாட் நகரில் இந்தியர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்குள்ள 605 அடி உயரம் கொண்ட ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதுபோல் கெர்ரி பார்க் பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் ஸ்மித், வாஷிங்டன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டெப்ரா ஸ்டீபன், சியாட்டில் துறைமுக கமிஷனர் சாம்சோ உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது சியாட்டில் வான்வெளியில் உயரே பறந்த தேசிய கொடியை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
அமெரிக்கா தவிர்த்த வேறொரு நாட்டின் தேசிய கொடி இந்த கோபுரத்தில் ஏற்றப்பட்டது இதுவே முதல் முறை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக
பார்க்கப்படுகிறது.