கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சென்னை, கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கத்தோடு சென்னை திரும்பிய அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ25 லட்சம் ரூபாய் வழங்கினார்.
தொடர்ந்து அவரை அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் வழங்கினார்.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 29) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் சார்பில் கார்த்திகாவுக்கு பாராட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம், “கபடி விளையாட்டில் சிறப்பாக விளையாடி பெருமைக்குரிய வெற்றியை பெற்றிருக்கிற வீராங்கனை கார்த்திகா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். கபடி போட்டியில் தங்கம் வென்றுள்ள கார்த்திகாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் ரூ.25,00,000/- பரிசுத் தொகை வழங்கியுள்ளனர்.
கண்ணகி நகரில் கபடிக்கென்று சிறப்பான பயிற்சி மையம் தாட்கோ மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. வெற்றி பெறுவதற்கு உழைப்பு தான் முக்கியம். பொருளாதாரமோ, சாதியோ காரணமாக அமைவது இல்லை. தற்போது கார்த்திகா பஹ்ரையில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில், இந்திய அணிக்காக பங்கேற்று விருது பெற்றிருக்கிறார். அவர் வருகின்ற ஒலிம்பிக் போட்டியிலும் கபடி அணியில் சிறப்பாக விளையாடி தங்கம் வெல்ல வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் இருவரும் என்றும் துணையாக இருப்பார்கள். கார்த்திகாவுக்கு ஒரு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவரது தாயாரும், பயிற்சியாளரும் கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் பேசுகிறேன். தமிழ்நாட்டின் பெருமையாக இருக்கிற கார்த்திகா தொடர்ந்து பல வெற்றிகளை பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.
ஆணையத் தலைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் பேசும் போது, “இன்று தமிழ்நாடே கொண்டாடும் விளையாட்டு வீராங்கனையாக இருக்கும் கார்த்திகா தொடர்ந்து பல வெற்றிகளை பெற வேண்டும். விளையாட்டுப் பிரிவில் தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு பிறகு, கார்த்திகா தங்க மங்கையாக விளங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.
