காஷ்மீரில் Trial.. மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கி நகரும் பாஜக- ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

DMK Stalin Warns

காஷ்மீரில் ட்ரையல்.. மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கி நகரும் பாஜக- ஸ்டாலின் எச்சரிக்கை

இந்தியாவில் இனி மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கி பாஜக நகர்ந்து கொண்டிருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

கரூரில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கட்சிகள் – வரும் போகும், ஆனால், தமிழ்நாட்டின் தனிப்பெருமை நிரந்தரமானது! தமிழ்மொழியின் சீரிளமை நிரந்தரமானது! நம்முடைய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது! டெல்லி நம்மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? ஒன்றா – இரண்டா..?

எத்தனை எத்தனை சதிகள்

ADVERTISEMENT

இந்தி மொழியைத் திணிக்கிறார்கள்! நம் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தர மறுக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக் கூட விடுவிக்க மறுக்கிறார்கள்! கீழடியின் தொன்மையை மறைக்கிறார்கள்!

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையையே பறிக்கிறார்கள்!

ADVERTISEMENT

பலிக்காத மோடி மஸ்தான் வேலை

ஆனால், அந்நாளும் சரி – இந்நாளும் சரி – எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! ஆதிக்கத்துக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! திணிப்புக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! மொத்தத்தில் இங்கே பா.ஜ.க.வுக்கு நோ எண்ட்ரிதான்! ஏன் என்றால், இது பெரியார் – அண்ணா – கலைஞர் – செதுக்கிய தமிழ்நாடு!

மூன்று முறை ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழ்நாட்டில் மட்டும் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே… இன்னுமா எங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை?

காஷ்மீரில் ட்ரையல் பார்த்த பாஜக

இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த முப்பெரும் விழாவை டி.வி.யில் – சோஷியல் மீடியாவில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்கிறேன்… தலைமுறை தலைமுறையாக நாம் போராடி – எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா?

பா.ஜ.க.-வை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு ட்ரையல் பார்த்துவிட்டார்கள். எப்படி, இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று ஒரு நிலை உருவானபோது, தமிழ்நாடு போராடி, மொழிப்போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோன்று இப்போது ஒரு உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது!

இதை நாம் செய்யவில்லை என்றால் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? இதற்குப் போராடவில்லை என்றால் வேறு எதற்குப் போராடுவது? இதுதான் முக்கியம்! இந்தப் போராட்டத்தில் முன்கள வீரனாக உங்களுடன் 23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயிலுக்குச் சென்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share